காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை விழுங்கியிருக்கின்றன துருக்கியில். ஆனாலும், தனது நாட்டுக்கு வெளியேயிருந்து உதவிகளைப் பெற மறுத்துவருகிறார் ஜனாதிபதி எர்டகான்.

துருக்கியின் தெற்குப் பகுதியில் காட்டுத்தீக்களின் அழிப்பு தொடர்ந்தும் படு மோசமாசமாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் துருக்கி தனது நட்பு நாடுகளின் உதவியைத் தீயணைப்புக்காக நாடவேண்டும் என்று கேட்பதை ஒற்றைக்காலில் நின்று மறுத்து வருகிறார் ஜனாதிபதி எர்டகான். #HelpTurkey என்ற சமூகவலைத்தள வேண்டுகோள்களை அவர் கடுமையாகச் சாடி வருகிறார்.

ஜூலை 28 ம் திகதியிலிருந்து இதுவரை 217 காட்டுத்தீக்கள் துருக்கியின் வெவ்வேறு பாகங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் நாட்டின் காடுகளை நிர்வகிக்கும் அதிகாரிகள். தொடர்ந்தும் இரண்டு மாகாணங்களில் ஆறு காட்டுத்தீக்கள் அடங்காமல் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. 

“நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அழிவுகளை அரசியலாக்காதீர்கள். துருக்கி பலமான ஒரு நாடு. எங்களால் இதைக் கையாள முடியும், என்பதே நான் என்னை விமர்சிப்பவர்களுக்குச் சொல்லிக்கொள்ள முற்படும் செய்தி,” என்கிறார் எர்டகான். அத்துடன் துருக்கியின் காட்டுத்தீ நிலைமை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் ஊதிப் பெரிதாக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதே சமயத்தில் துருக்கியின் அரச வழக்கறிஞர் காட்டுத்தீக்கள், விமர்சனங்கள், உதவி வேண்டுகோள்கள் போன்றவை ‘நாட்டு மக்களிடையே மன அழுத்தத்தையும், பயத்தையும் உண்டாக்கத் திட்டமிட்டுச் செய்யப்படுபவையா?, துருக்கிய அரசைக் கேவலமாகச் சித்தரிப்பதற்காக நடக்கும் சதியா?’ என்று விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. 

துருக்கிய அரசின் ஊடகங்களைக் கண்காணிக்கும் திணைக்களம் ‘எரியும் காட்டுத்தீ, அவைகளின் விபரங்களை வெளியிடுவது மக்களிடையே கிலியை உண்டாக்கும்” என்று குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்குமாறு எச்சரித்திருக்கிறது. பல ஊடகங்கள் இதனால் நிலைமையை விபரிப்பதை முடிந்தளவு தவிர்த்தும் வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *