தலிபான்கள் ஆட்சிக்கு வருவதையறிந்து படுவேகமாக எல்லைமதில் கட்டும் நாடு துருக்கி.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் திறந்த வெளி அகதிகள் முகாம்கள் போல ஆகிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு விமானத்திலேறி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடும் கனவுடன் பல்லாயிரக்கணக்கானோர் அங்கே குவிந்திருக்கிறார்கள். 

ஆப்கானிஸ்தானின் மற்றைய பகுதிகளிலிருந்து பெரும்பாலானோர் பாகிஸ்தான், ஈரான், தாஜிக்கிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளை நோக்கியும் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாடுகளும் தமது எல்லைகளை வெவ்வேறு வழிகளில் மூடிவருகின்றன அல்லது எல்லைகளையடுத்து அகதிகள் முகாம்களைத் தயார்செய்திருக்கின்றன.

ஐரோப்பாவை நோக்கி அகதிகளாகப் புலம்பெயரும் ஆப்கானர்கள் ஈரான் ஊடாக நுழைந்து துருக்கிய எல்லையை அடைவது வழக்கம். அதையடுத்து கிரீஸுக்குள் நுழைவதன் முலம் ஐரோப்பாவுக்குள் புகலிடம் பெறுவது அவர்களது திட்டமாக இருக்கிறது. 

தனது எல்லையினுடாக அகதிகள் கடந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையாமலிருக்கத் தடுக்கும் ஒப்பந்தங்களைச் சமீப வருடங்களில் துருக்கியுடன் ஐ.ஒன்றியம் செய்து வருகிறது. பல மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனங்களையும் ஒதுக்கிவிட்டுப் பல பில்லியன் எவ்ரோக்களைத் துருக்கிய அரசுக்கு “உதவித் தொகை” என்ற பெயரில் கொடுக்கிறது ஐ.ஒன்றியம். துருக்கியோ ஐரோப்பாவின் பலவீனத்தைப் பாவித்து தனது எல்லைகளை திறந்து விடப்போவதாக மிரட்டி அரசியல் உட்பட பல விடயங்களிலும் காரியம் சாதித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து தற்போது பெருமளவில் அகதிகள் வரலாம் என்ற எண்ணத்தில் துருக்கி தனது எல்லைகளில் கட்டிவரும் 3 மீற்றர் உயரமான மதில் திட்டத்தை முடுக்கி விட்டிருக்கிறது. ஏற்கனவே 54 மைல் மதில் கட்டி முடித்துவிட்டிருக்க மேலும் 64 கி.மீ இவ்வருடத்துக்கிடையே கட்டி முடிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது துருக்கி.

ஈரானில் எல்லையிலிருக்கும் அம்மதில் ஈரானிலிருந்து ஆப்கானர்களை வரவிடாமல் தடுக்கும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார் எல்ல நகர ஆளுனர் ஏமின் பில்மெஸ். மிச்சமிருக்கும் எல்லை கரடுமுரடான மலைப்பகுதியாகும். அங்கே அகழிகளும், கம்பி வேலிகளும் இருப்பது தவிர 24 மணி நேரமும் எல்லைக் காவலர்கள் காத்து வருகிறார்கள்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் இதுவரை 69,000 ஆப்கானர்கள் அனுமதியின்றி எல்லையூடாக உள்ளே வர முயற்சித்துத் திருப்பியனுப்பப்பட்டார்கள் என்கிறார் பிஸ்மெல். அவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள் என்கிறார் அவர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *