பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

முதல் தடவையாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதன் விளைவாக அங்கே கல்வி கற்பதற்கான செலவுகள் ஐரோப்பிய மாணவர்களுக்கு முன்னரைவிட அதிகமாகியிருக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் சீனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. வரவிருக்கும் பல்கலைக்கழகக் கல்வியாண்டில் படிப்பதற்கு விண்ணப்பித்திருக்கும் ஐரோப்பிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட பாதியாகியிருக்கிறது. அதனால், சீன மாணவர்களின் மொத்த எண்ணிக்கை ஐரோப்பிய மாணவர்களின் எண்ணிக்கையை விட 29,000 அதிகமாக இருக்கிறது.

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களின் ஒன்றியம் நாட்டில் படிக்கவரும் மாணவர்களிடையே பல இன மாணவர்களும் கலந்திருக்கவேண்டுமென்று விரும்புகிறது. அத்துடன், சமீப காலத்தில் அரசியல் நோட்டத்தில் சீனாவும், பிரிட்டனும் தமக்கிடையே பல கருத்து வேறுபாடுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. 

கொரோனாக் கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பெரும் பிரச்சினையாக இருப்பினும் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த வருட 7,640 லிருந்து இவ்வருடம் 9,930 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு தசாப்தமாகவே இந்திய மாணவர்கள் பிரிட்டனில் படிக்க விண்ணப்பிப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் அதிக மாணவர்கள் இந்தியர்களாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *