சர்வதேசத்தை கலக்கிவைத்த, ஜப்பானின் சிகப்புத் தேவதை, சிறையிலிருந்து விடுதலை.
ஜப்பானிய சிகப்பு இராணுவத்தின் [Japanese Red Army] நிறுவனர்களில் ஒருவரான புசாக்கோ சிஜெனொபு 1970, 80 காலத்தில் உலகை அதிரவைத்த பல தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியவளாகும். 20 வருடச் சிறைத்தண்டனையின் பின்னர் சிஜெனொபு இன்று டோக்கியோவில் விடுதலை செய்யப்பட்டார்.
“எனது கைதால் பலருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நான் மனம் வருந்துகிறேன். அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எங்களுடைய போராட்டங்களுக்காக நாம் எம்மை அறியாத பலருக்கும், நிரபராதிகளுக்கும் அழிவுகளையும், பணயக்கைதிகளாக்குதல் போன்ற தொல்லைகளையும் கொடுத்தோம். இன்று நான் உயிரோடு வெளியே வந்ததற்காக உற்சாகத்தை உணர்கிறேன்,” என்று குறிப்பிட்ட சிஜெனொபுவை அவரது மகளும், ஆதரவாளர்களும் வரவேற்றார்கள்.
இஸ்ராயேல் இராணுவத்துக்குப் பெரும் தலையிடியாக விளங்கிய ஜப்பானியச் சிகப்பு இராணுவத்தை சிஜெனொபு 1971 இல் லெபனானில் ஸ்தாபித்தார். அவர்களுடைய நோக்கம் பாலஸ்தீனாவின் விடுதலைக்காகப் போராடுவதாகும். அவர்களுடைய பல தாக்குதல்கள் 1970 களில் நடந்தேறின.
1972 இல் இஸ்ராயேலின் தெல் அவிவ் லொட் விமான நிலையத்தில் [தற்போதைய பென் குரியான் விமான நிலையம்] சிஜெனொபுவின் திட்டத்துடன் நடந்த தாக்குதல் உலகம் முழுவதுமே அந்த இயக்கத்தைக் கண்டு கலங்க வைத்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒன்றுக்காகச் செய்யப்பட்ட அந்தத் தாக்குதலில் மூன்று ஜப்பானியச் சிகப்பு இராணுவத்தினர் பங்குபற்றினர். ரோமிலிருந்த வந்திருந்த அவர்கள் தமது ஆயுதங்களை எவரும் சந்தேகிக்க முடியாதபடி வயலின் பெட்டிகளுக்குள் கொண்டுவந்திருந்தார்கள். 26 பேர் கொலை செய்யப்பட்டு 80 பேர் காயமடைந்தார்கள்.
இரண்டு கொலையாளிகள் கொல்லப்பட்டு கோஸோ ஒக்கமோட்டோ என்ற ஒருவன் மட்டும் காயப்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டான். இஸ்ராயேல், பாலஸ்தீனப் போர்க்கைதிகள் பரிமாற்றமொன்றில் 1985 இல் விடுவிக்கப்பட்ட ஒக்கமோட்டோ தொடர்ந்தும் லெபனானில் வாழ்வதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் சில ஜப்பானிய சிகப்பு இராணுவ அங்கத்துவர்கள் ஜப்பான் அரசாலும் வெவ்வேறு நாடுகளினாலும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்கள்.
மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பானியச் சிகப்பு இராணுவத்தினரின் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அவைகளின் முழு விபரங்கள் தொடர்ந்தும் எவருக்கும் தெரியாது. 1980 களிலும் சில தாக்குதல்களை நடத்திய அவர்கள் 1988 இல் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர அமெரிக்க இராணுவ மையத்தைத் தாக்கிய பின்னர் காணாமல் போய்விட்டார்கள்.
1974 இல் நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரிலிருக்கும் பிரெஞ்சுத் தூதுவராலயத்தைத் தாக்கி நுழைந்து தூதுவரையும், மேலும் 10 ஊழியர்களையும் சுமார் 100 மணி நேரம் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள் சிகப்பு இராணுவத்தினர். இருவர் கொல்லப்பட்டார்கள். தூதுவராலயம் மக்கள் நெருக்கமாக நடமாடும் இடத்தில் இருந்ததால் தாக்குதல் நடத்தியவர்கள் கேட்டபடி பிரான்ஸ் பணயத்தொகையைக் கொடுத்து, சிறையிலிருந்த மேலுமொரு ஜப்பானியச் சிகப்பு இராணுவ அங்கத்துவரை விடுதலை செய்து அவர்கள் தப்பியோட விமானமொன்றையும் கொடுத்தது. பின்னர் அவ்விமானம் டமாஸ்கஸ், சிரியாவில் மடக்கப்பட்டு அவர்கள் சிறைப்படுத்தப்பட்டுக் கொடுத்த பணயத்தொகையும் பறித்தெடுக்கப்பட்டது.
சிஜெனொபு 30 வருடங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஒளிந்து வாழ்ந்திருந்தார். பிரெஞ்சுத் தூதுவராலயத் தாக்குதலுக்காக அவர் ஜப்பானில் 2000 இல் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அவர் குறிப்பிட்டார். அவர் அதில் நேரடியாகப் பங்குபற்றாவிட்டாலும் பாலஸ்தீனத் தீவிரவாத இயக்கமொன்றுடன் கூட்டுச்சேர்ந்து அதற்காகத் திட்டமிட்டார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“நாங்கள் செய்த போர் விரயமாகி ஒரு அழுகிய முடிவாக மாறியது. எனது மிச்சமிருக்கும் காலத்தில் எனது நடவடிக்கைகள் பற்றி நான் ஆழமாக அலசிக்கொள்வேன்,” என்று குறிப்பிடும் சிஜெனொபுக்கு வயது 76 ஆகும். தனது 25 வது வயதில் அவர் ஆயுதப் போராட்டத்தில் குதித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்