பாலஸ்தீன அரசியலிலிருக்கும் பிளவுகளை ஒட்டிவைக்க அல்ஜீரியா பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் ஆண்டுவரும் இரண்டு அரசியல் அமைப்புக்களான அல் பத்தா, ஹமாஸ் ஆகியவையிடையே நீண்ட காலமாகவே ஆழமான பிளவுகள் இருந்துவருகின்றன. காஸா பிராந்தியத்தில் ஆட்சிசெய்துவருகிறது சர்வதேச ரீதியில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ். அதைத் தவிர்ந்த பாலஸ்தினப் பிராந்தியங்கள் அல் பத்தா அமைப்பிடம் இருக்கின்றன.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவான அல் பத்தா பாலஸ்தீனர்களின் விடுதலைக்கான பேச்சுவார்த்தைகள் தம் தலைமையில் தான் நடக்கவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு அல் பத்தா இஸ்ராயேலிடம் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பாலஸ்தீனர்களின் பல உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை எதிர்த்து வருகிறது. 

காஸாவில் 2006 இல் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. பாலஸ்தீனத்தின் மற்றைய பகுதியான மேற்குப் பள்ளத்தாக்கில் 2005 இல் நடந்த தேர்தல்களில் அல் பத்தா ஆட்சியைக் கைப்பற்றியது. இரண்டு பகுதியாரும் அதன் பின்னர் தமது பாகங்களில் தேர்தல்களெதையும் நடத்தாமலே ஆட்சியிலிருந்து வருகிறார்கள்.

கடந்த மாதம் அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜீத் தெபூன் பாலஸ்தீன இயக்கங்களிடையே தொடர்ந்துவரும் போட்டி அரசியலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தனது நாட்டில் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். 

அதற்காகச் சனிக்கிழமையன்று அல் பத்தாவின் சார்பில் பங்கெடுக்கும் பிரதிநிதிகள் அல்ஜீரியாவுக்குச் சென்றார்கள். அவர்களுடன் அப்துல்மஜீத் தெபூனும், அல்ஜீரிய மத்தியஸ்தர்களும் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்பு திங்களன்று ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகளும் அல்ஜீரியாவுக்குப் பயணமாகியிருக்கிறார்கள். தமக்கிடையே ஒற்றுமையை உருவாக்க முயற்சிசெய்யும் அல்ஜீரிய ஜனாதிபதிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்