தனது மருந்துகளை இலாபம் தவிர்த்த விலைக்கு வறிய நாடுகளில் விற்க பைசர் நிறுவனம் முன்வந்துள்ளது.
டாவோஸ் நகரில் நடந்துகொண்டிருக்கும் “சர்வதேச பொருளாதார மாநாட்டில்” உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள். பைசர் நிறுவனத்தின் சார்பில் அங்கே அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி அவர்கள் தமது கையிலிருப்பிலிருக்கும் உரிமைகள் கொண்ட மருந்துகளை வறிய, நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு இலாபமற்ற நோக்குடன் விற்கத் தயாராக இருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் மக்கள் ஆரோக்கியத்துக்காக நாடுகள் செலவழிக்கும் தொகையில் 15 விகிதம் மட்டுமே வறிய, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் செலவிடப்படுகின்றன. ஆனால், உலகின் 70 விகிதமான நோயாளிகள் அப்படியான வசதிகள் குன்றிய நாடுகளிலேயே இருக்கிறார்கள்.
உலகின் 40 நாடுகள் பைசர் நிறுவனம் அறிவித்த திட்டத்தில் பங்கெடுக்கத் தகைமையுள்ளவை. கானா, மலாவி, செனகல், ருவாண்டா, உகண்டா ஆகிய நாடுகள் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் திட்டத்தில் தாம் பங்கெடுப்பதாக அறிவித்திருக்கின்றன.
பரவக்கூடிய வியாதிகள், புற்று நோய்கள், ஆங்காங்கே காணப்படும் அரிய வியாதிகள், பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவைக்கான 23 மருந்துகளின் உரிமைகளை பைசர் நிறுவனம் தற்போது கொண்டுள்ளது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தற்போது கிடைக்கக்கூடிய அந்த மருந்துகளை மேலும் 1.2 பில்லியன் பேருக்குக் கிடைக்கச் செய்வதே தங்களது நோக்கம் என்று பைசர் நிறுவனத்தின் சார்பில் அக்னேத்தா வாங் தெரிவித்தார்.
இலாபமற்ற விலையில் மருந்துக்கான தயாரிப்புச் செலவும் அதைக் குறிப்பிட்ட நாடுகளின் குறிப்பிட்ட துறைமுகத்தில் சேர்ப்பதற்கான தொகையும் மட்டுமே இருக்கும் என்று பைசர் பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார். தாம் குறிப்பிடும் விலையில் கூட அந்த மருந்துகளை வாங்க வழியில்லாத நிலையில் நாடுகள் இருக்கின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். அதனால், தாம் சர்வதேச நிறுவனங்களின் மனிதாபிமான உதவி அமைப்புக்களிடமும் இத்திட்டத்தில் சேரும்படி கேட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அதன் மூலம் சில நாடுகளுக்கான உதவிகளைக் குறிப்பிட்ட உதவி அமைப்புக்கள் மூலம் செய்யப்படும் வாய்ப்புகள் உண்டாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்