இரண்டாம் தாய்|கவிநடை

பரவசத்துடன் முதல் நாள் நுழைந்த கல்லூரியின் வாயிற் கதவுகள் …..


எதையோ கற்றுத் தரப் போகிறது என தேடிய காலடித் தடங்கள் …


பாதையெங்கும் பாங்காய் பார்க்கும் மரங்கள் …..


காற்றிடம் காதல் பேசும் காலதர்கள் ….


நயமாய் நின்று வரவேற்கும் நான்கு பக்கச் சுவர்கள் ……


மேதைகளாம் இவர்களுக்கு இடம் தரத்துடிக்கும் ஏக்கத்தில் மேசைகள் …….

வழி மீது விழி நோக்கும் அறையின் கதவுகள் ……

நின்று கொண்டே வாழ்வினை வளமாக்க  ஏணிப்படிகளாக நிற்கும்
ஆசிரியர்கள் …..


பல்திறன் நிகழ்வில் பரவசம் காண வைத்த பண்பு ….


விளையாட்டு நாளில் கண்ட விசித்திரம் ….


நாட்டு நலப்பணியில் தேடிக் கண்ட நல்லவைகள் ……
அங்கே களித்த நாட்கள் ….


நாடகத்தில் நவரசம் கண்ட நாயகர்கள் ….
வசைகளை வண்ணமயமாக்கிய வசந்தகாலப் பூக்கள் ….


நகைச்சுவை கண்டு ஆனந்தம் கொள்ளும் தளிர்கள் ….

துடிப்பாய் நின்று துடுப்பாய் இருக்கும் நண்பர்கள் ……


கண்டவுடனே இவர்களை கலங்கடிப்பார்களா என்னும் ஐயத்தில் இந்தக் காரிகைகள் ….


இறைவணக்க கூட்டத்தில் அணிவகுப்பின் ஆரவாரம் ….


தேர்வு அறையில் நிசபதமான நிமிடங்கள் …..


முடிவுகளில் முகத்தில் சில நேரம் இன்பம்,
சில நேரம் கவலை என இரண்டும் கலந்த மனநிலை …..


வாழ்வின் அடுத்த பக்கத்தை திறக்கப் போகும் வரலாற்றின் ஏடுகளாக எங்கள்
வருங்கால கனவுகள் …..


கனவுகளை நனவாக்கத் துடிக்கும் ….. கரும்பலகைகள் …….


முத்தமிழ்க் கடலில் முகந்தெடுத்து முத்தெடுக்கத் துடிக்கும் முத்துக் குளிப்பவர்கள் …


இப்படி அனைத்தையும் கற்றுக் கொடுத்து பிரசவிக்க வைத்த இரண்டாம் தாய்
எங்கள் வகுப்பறை !

எழுதுவது : ச.சோமசேகர், தருமபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *