தரணியிலே பெருமை வேண்டும்

பிறப்பினில் பெருமை
நிகழ்ந்திட வேண்டும்.

இறப்பினில் இதயங்களில்
இதயமாதல் வேண்டும்.

மனதினால் அன்பினை
விதைத்திட வேண்டும்.

உறுதியால் அவாவினைச்
சிதைத்திட வேண்டும்.

கல்வியால் காரியங்கள்
வாய்த்திட வேண்டும்.

உதவியால் உயரங்கள்
எய்திட வேண்டும்.

நினைவினில் நல்லவை
நலமாதல் வேண்டும்.

மண்ணில் அல்லவை
புறமாதல் வேண்டும்.

கனவினில் காண்பவை
மெய்ப்பட வேண்டும்.

நனவினில் நடப்பவை
வசப்பட வேண்டும்.

காரியத்தில் கண்ணியமாய்க்
கருத்தாதல் வேண்டும்.

குவலயத்தில் மதுவினை
ஒழித்திட வேண்டும்.

அறியாமை அகற்றுவதில்
நிலைப்பாடு வேண்டும்.

நிலையாமைப் பொருளில்
உறுதிப்பாடு வேண்டும்.

தனமும் தானமும்
நிலையாதல் வேண்டும்.

அன்பும் அறனும்
அகிலத்திற்கே வேண்டும்.

கையூட்டு வழங்கேன்
மனதிலுறுதி வேண்டும்.

ஊழலினை ஒழிப்பேன்
சபதமேற்றிட வேண்டும்.

பெண்மைக்கு மதிப்பினை
வழங்கிட வேண்டும்.

உண்மைக்கு உரியவராய்
வாழ்ந்திட வேண்டும்.

இயற்கையைப் பாதுகாத்திட
உயிரறிவு வேண்டும்.

செயற்கையை அகற்றிட
உயரறிவு வேண்டும்.

பாரதியின் கூற்றினை
மெய்ப்பித்திட வேண்டும்.

சாரதியாய்த் தரணியிலே
பெருமை வேண்டும்.

எழுதுவது ; முனைவர் இராமகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *