காடுகளை அழிப்பதற்குக் காரணமாக இருக்கும் பொருட்களின் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

கோப்பி, ரப்பர், கொக்கோ, சோயா, தளபாடங்கள், சோயா, இறைச்சி, பாமாயில்  உட்பட்ட பல பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவைகளின் தயாரிப்பால் காடுகள் அழிப்பு ஏற்படலாகாது என்று ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது. அதாவது ஒன்றியத்தின் 27 நாடுகளின் நிறுவனங்கள் குறிப்பிட்ட பட்டியலிலிருக்கும் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவைகளின் தயாரிப்பு வழியில் காடுகள் அழிப்பு ஏற்படவில்லை என்பதைக் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். 

அதற்கான கால எல்லையாக டிசம்பர் 31, 2020 க்குப் பின்னர் அழிக்கப்பட்ட காடுகளில் குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கக்கூடாது. பிரேசில், மலேசியா, இந்தோனேசியா, நைஜீரியா, எத்தியோப்பியா, கொங்கோ குடியரசு, குவாத்தமாலா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் தேவையான அனுமதிகளின்றிக் களவாகக் காடுகள் அழிக்கப்பட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கான உற்பத்திக்குப் பாவிக்கப்பட்டு வருவதைத் தடை செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கிறது.

“இது ஒரு தீவிரமான முடிவாகும். நாம் காலையில் குடிக்கும் கோப்பி, சுவைக்கும் சொக்கலேட்டுகள், சுட்டுச் சாப்பிடும் இறைச்சி, வாசிக்கும் புத்தகங்கள் எல்லாவற்றையுமே இந்த நடவடிக்கை பாதிக்கிறது,” என்று ஒன்றியம் எடுத்திருக்கும் முடிவைப் பாராட்டினார் பாராளுமன்றத்தின் சூழல் பேணும் குழுவினரின் காரியதரிசி பஸ்கால் கன்பின் [Canfin].

உலகில் குறிப்பிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்  நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியமே இருக்கிறது. எனவே, உலகில் கொள்வனவு செய்பவர்களால் காடுகளை அழிப்பதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் இதுவே முதன்மையானது என்று கிரீன்பீஸ் அமைப்பு பாராட்டியிருக்கிறது.

குறிப்பிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு நிறுத்தும் கட்டுப்பாடுகளுக்கு ஒவ்வாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இறக்குமதி செய்யும் நிறுவனங்களையே சாரும். மரபணு பரிசீலனை, செயற்கைக்கோள்கள் மூலமான கண்காணிப்பு மூலமாக ஒன்றியம் ஆராய்வு செய்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கடும் தண்டங்களை விதிக்கவிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *