தால்லின்னிலிருந்து வார்ஸோவா வரை ஏழே மணிகளில் பயணிக்க “ரயில் பால்டிகா” திட்டம் தயாராகிறது.

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்ட்லாந்திலிருந்து புறப்பட்டு லத்வியா, லித்தவேனியா நாடுகளினூடாக போலந்தின் தலைநகரை ஏழே மணித்தியாலங்களில் பயணிக்கக்கூடியதாக ரயில் திட்டம் உருவாகி வருகிறது. 2027 இல் தயாராகிவிடுமென்று குறிப்பிடப்படும் இத்திட்டம் “ரயில் பால்டிகா” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

850 கி.மீற்றர் தூரமுள்ள இந்த ரயில் தொடர்பில் 240 கி.மீ வேகத்தில் நவீன ரயில்கள் பயணிக்கக்கூடியதாக இருக்கும். சுதந்திரத்துக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவின் பாகமாக இருந்த இந்த நாடுகளிலிருக்கும் ரயில் பாதைகளின் அகலம், அமைப்பு போன்றவை ஐரோப்பிய ரயில் பாதைகளின் அமைப்புக்கு ஏற்றபடி இல்லாததால் இதுவரை இந்த நாடுகளை ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்க முடியாதிருந்தது. 

சில வருடங்களாகவே திட்டமாக இருந்துவந்த “ரயில் பால்டிகா” குறிப்பிட்ட மூன்று நாடுகளும் அதற்கான முதலீடுகளை எப்படிப் பெற்றுக்கொள்வது என்று ஐரோப்பிய ஒன்றியத்துடனும், தங்களுக்குள்ளும் முரண்பட்டு வந்ததால் கைவிடப்படுமோ என்ற ஆபத்தான நிலையை எட்டியிருந்தது. ஆனால், சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நீண்டகால வரவு செலவுத் திட்டத்தில் பால்டிக் நாடுகள் ஒரு வழியாக ஒன்றுபட்டிருக்கின்றன. 

“ரயில் பால்டிகா” ஸ்தாபிப்பதற்கான செலவு சுமார் 5.8 பில்லியன் எவ்ரோக்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தொகையில் 85 % ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டுப் பங்காக இருக்கும்.

பால்டிக் நாடுகளை இணைப்பதுடன் எஸ்டாந்தின் தலைநகரான தால்லின்னை பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியுடன் இணைக்கும் திட்டமும் இருக்கிறது. அதற்காக அவ்விரண்டு நாடுகளிடயேயும் சுமார் 60 – 80 கி.மீற்றர் நீருக்குக் கீழான சுரங்க ரயில் பாதை அமைக்கவிருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *