மறந்து போகுமா மறவர்கள் மாவீரம்…🌺

தொலைத்த இடத்திலேயே
தேடியிருக்க வேண்டும்
நாங்களும் திட்டமிடப்பட்டே தொலைக்கப்பட்டோம்
என்ற புரிதலே இல்லாத நமக்கு
தொலைந்த இடத்திலேயே நீவிர்
விதைகளாகிப் போனது நம் சிந்தைகளிலுறைத்த
காலங்கடந்த ஞானம்

நமது விரல்களைக் கொண்டே
நம் கண்கள் குத்தப்பட்டன
ஒருபுறம் வீரமும்
இனமொழி விடுதலையும்
தமக்கான பாதைகளை வழிவகுத்தன
மறுபுறம் அச்சமும்
வர்க்க சிந்தனையும்
திட்டமிட்டுத் திறந்து வைக்கப்பட்ட
பாதைகள் வழியே வெளியேறின

பலரை உங்களின் குரலாகவும்
இன்னும் பலரை
உங்களின் அவலமாகவும்
ஆக்கியது இவ்வுலகு

உங்களின் அரசியல் பார்வையில் தெளிவில்லை
ராஜதந்திர அணுகுமுறைகளில்
பலமில்லை
எனக்கூறும் விமர்சகற்கு எதிரியின்
ஒவ்வொரு துப்பாக்கி ரவையிலும்
உங்கள் பெயர்கள்
எழுதப்பட்டிருப்பது தெரிந்தே நீங்கள் கழுத்தில் மரணத்தைச் சுமந்து
சிரித்தது நினைவில் நிற்கவில்லை

நிகழ்காலம் நிர்க்கதியான அரசியலாடையை உடுத்தி ஆடட்டும்
சர்வதேசம் இடைத்தரகர்களின்
நலன்களைப் பேணட்டும்
இனி எப்படி ஆகுமோ அச்சமில்லை
அது எதுவாகவேனும் ஆகட்டும்
ஆனால் உங்கள் தன்னலமற்ற மாவீரம்
அடுத்த தலைமுறையினராலும்
போற்றி வணங்கப்பட வேண்டும்
அதுவே இனமாய் மொழியாய் நாம் எல்லோரும் உமது பாதங்கள்
பணிந்து வழங்கும் பிராயச்சித்தம்
வீர வணக்கம் மறவர்களே🙏🙏🙏

எழுதுவது சோதி மாணிக்கம்