தமது ரொசெட்டா கல்வெட்டை பிரிட்டர்கள் திருப்பித் தரவேண்டும் என்று கோரும் எகிப்தியர்கள்.

சமீப வருடங்களில் ஆபிரிக்க, ஆசிய நாடுகள் தமது பகுதிகளிலில்ருந்து  ஐரோப்பியர்கள் ஆண்ட காலத்தில் எடுத்துச் சென்ற பாரம்பரியச் சொத்துக்களை, புராதனச் சின்னங்களைத் திருப்பித்தரவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

சில ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தமது அருங்காட்சியகங்களிலிருக்கும் அப்படியான பொருட்களில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்தும், கொடுப்பதற்கதற்கான ஏற்பாடுகளைச் செய்தும் வருகின்றன.

எகிப்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுத் தமது ரொசெட்டா கல்வெட்டைத் திருப்பித் தரவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

“எங்கள் புராதன அடையாளங்களிலொன்றான அந்தக் கல்வெட்டை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் தன்னிடம் வைத்திருப்பது கலாச்சார வன்முறை,” என்று பல்லாயிரக்கணக்கானோரால் கையெழுத்திடப்பட்டிருக்கும் அந்தக் கோரிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ரொசெட்டா கல்வெட்டானது அடையாளங்களாலும், வரைதல்களாலும் அமைக்கப்பட்ட எகிப்திய புராதன மொழியால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த முறை ஹீரோகிளிபிக்ஸ் [hieroglyphics] என்று அழைக்கப்படுகிறது. 

பிரெஞ்சுக்காரர்கள் நெப்போலியன் தலைமையில் எகிப்தைக் கைப்பற்றிய காலத்தில் ரொசெட்டா கல்வெட்டு எகிப்தின் ரஷித் நகரில் தோண்டியெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் அவர்களிடமிருந்து எகிப்தை 1801 இல் கைப்பற்றியபோது குறிப்பிட்ட கல்வெட்டு உட்பட்ட மேலும் பல புராதனப் பொருட்களை அங்கிருந்து எடுத்து பிரிட்டனுக்குக் கொண்டுசென்றார்கள்.

பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் அக்கல்வெட்டு அச்சமயம் முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கு முன்னர் எகிப்து ஒத்தமான் பேரரசுக்குக் கீழிருந்தது. அந்தப் பேரரசின் தளபதி ஒருவர் பிரிட்டிஷ் இராணுவத்துடன் சேர்ந்து போரிட்டதாகவும், வெற்றியின் பின்னர் அந்தச் சாம்ராச்சியத்தின் சார்பில் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு அதைத் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பிரிட்டிஷார் சார்பில் குறிப்பிடப்படுகிறது. 

எகிப்திய அரசு தம்மிடம் அந்தக் கல்வெட்டைத் திருப்பித்தரும்படி கோரவில்லை என்பதையும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அத்துடன் அக்கல்வெட்டின் பிரதிகளில் 21 தொடர்ந்தும் எகிப்தில் இருப்பதாகப் பதிலளித்திருக்கிறது. 

எகிப்தின் தற்போதைய அரசு நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட  பழங்காலப் பாரம்பரியப் பொருட்களில் பல்லாயிரக்கணக்கானவற்றைத் திருப்பித்தரும்படி வெவ்வேறு அரசுகளிடம் கோரியிருக்கிறது.  ரொசெட்டா கல்வெட்டு பற்றிய அரசின் நிலைப்பாடு என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *