ஜனாதிபதியின் கட்டில், மெத்தைச் சர்ச்சை சிறீலங்காப் பாராளுமன்றம் வரை!

சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் டிசம்பர் 9 ம் திகதி எழுப்பப்பட்ட கேள்வியொன்று ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் நுழைந்த உல்லாச மெத்தையொன்றைப் பற்றியதாகும். பெயர் வெளியிடப்படாத தனியார் நிறுவனமொன்றால் மெத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதா, பாராளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் ஜனாதிபதி அலுவலகத்தினுள் அம்மெத்தையில் உறங்குபவர் ஜனாதிபதியா அல்லது வேறு யாருமா என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினரான புத்திக்க பதிரண எழுப்பியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தனது சத்தியப்பிரமாணத்து விழாவுக்கான செலவுகளையெல்லாம் தானே செலவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அப்படியிருக்கும்போது ஒரு தனியார் நிறுவனம் செலவைக் கொடுக்க, மர்மமான முறையில் அந்த உல்லாச மெத்தை பாராளுமன்றத்துக்குள் எப்படி வரமுடியும்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

ஏன் அப்படி ஒரு மெத்தை இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது, அது ஏன் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளது? எனக்குத் தெரிந்தவரை அந்த அறையில் யாரும் தூங்குவதில்லை. அந்த அறையில் யாராவது படுக்கைக்குச் செல்கிறார்களா? என்ற தீவிரமான கேள்வியை இது எழுப்புகிறது,” என்று குறிப்பிட்ட பதிரண அதை விசாரிக்க பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஒரு குழுவை நியமிக்க வேண்டுமென்றும் அல்லது தான் நேரே அந்த அறைக்குள் சென்று அந்த மெத்தையைப் பற்றிய விபரங்களை விசாரிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

மெத்தை பற்றி பா.உ பதிரண எழுப்பிய கேள்வியானது பாராளுமன்றத்துக்குள் பெரும் சிரிப்பை உண்டாக்கியது. தனது எஸ்.ஜே.பி பா. உ-வின் ஆதரவாகப் பேசிய இன்னொரு சகா குறிப்பிட்ட மெத்தைக்கான பணத்தைக் கொடுத்த நிறுவனத்துக்கு அரசாங்கத் திணைக்களமொன்று அம்பாந்தோட்டையில் 20 ஏக்கர் நிலத்தைக் கொடுத்ததாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சொன்னார்.

 “அதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார். நீங்கள் அந்த படுக்கையில் தூங்கப் போவதில்லை, இல்லையா? நீங்கள் அதில் தூங்க விரும்புகிறீர்கள் போலும், அதனால்தான் நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்களா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அரசாங்க தரப்பு பா.உ-க்களின் தலைவர் பிரசன்ன ரணதுங்கா சொன்னார். “நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன, அவைகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து இதுபோன்ற சில்லறை விடயங்களில் வீணாக்கலாகாது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *