COP 27 மாநாட்டுக்கு வந்தோர் மீது கண்காணிக்கிறதா எகிப்து? சர்வதேச அளவில் கடும் விமர்சனம்.

ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாநாட்டில் எகிப்தின் தலைமை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பங்கெடுக்க வந்திருக்கும் தனியார் அமைப்புக்களின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தம் மற்றும் கண்காணிப்பு நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

மாநாட்டுக்கு வரவிருப்பவர்களுக்கு அதன் கூட்டங்கள், விபரங்களை அறிந்துகொள்ள் எகிப்திய அரசால் உண்டாக்கப்பட்ட செயலி ஒன்றைத் தத்தம் கைப்பேசியில் தரவிறக்கிப் பதிந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. அந்தச் செயலியின் மூலம் பங்கெடுப்போரைக் கண்காணித்து நடவடிக்கைகளைத் தொடர்வதே என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.

எகிப்தின் துப்புரவு பணியாளர்கள்,  தொழில்நுட்ப ஆதரவாளர்கள் என்ற அட்டையுடன் கூட்டங்கள் நடக்கும் மண்டபங்களில் திரிபவர்கள் பங்கேற்பாளர்களைக் கண்காணித்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகள் மூடிய கதவுக்குள் சந்திப்புகளை நடத்தினால் அங்கே தாம் நுழைவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுக்கள் பலரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

எகிப்திய அதிகாரிகள் மாநாட்டில் நேரடியாக முரண்பட்டுக்கொண்ட நாடான ஜேர்மனி அதுபற்றிய முறைப்பாடுகளை மாநாட்டுத் தலைமையிடம் ஒப்படைத்திருக்கிறது. ஜேர்மனி ஒழுங்கு செய்து நடத்திய நிகழ்ச்சிகள், கூட்டங்களை எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகள் படமாக்கினார்கள். இடையிடையே உள்ளே நுழைந்து தொந்தரவு செய்தார்கள். 

எகிப்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவைக்காகக் குரல் கொடுப்பவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அந்த மாநாட்டில் அரசின் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் உலகம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வருடம் எகிப்து, அடுத்த வருடம் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் காலநிலை மாநாட்டை நடத்தவிருக்கின்றன. ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத,  அரசை விமர்சிப்பவர்களை வேட்டையாடி வதைத்து வரும் இது போன்ற நாடுகளில் இப்படியான மாநாடுகளை நடத்துவது அவசியமே என்று ஒரு பக்கத்திலும் அது புத்திசாலித்தனமானதா என்று இன்னொரு பக்கத்திலும் கேள்விக்குறிகள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *