நிலக்கரிப் பாவனையை நிறுத்த ஜி 7 நாடுகள் 15 பில்லியன் வியட்நாமுக்கும், இந்தோனேசியாவுக்கும் கொடுக்கத் தயார்!

தமது நாட்டின் எரிசக்தித் தேவைக்காக நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்தும்படி இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம் நாடுகளிடம்  கேட்டு அதற்காகப் பொருளாதார உதவி கொடுத்தத் தயாராக இருப்பதாக ஜி 7 நாடுகள் குறிப்பிட்டிருக்கின்றன. இது பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஜி 7 நாடுகளின் அந்தச் சலுகையை ஏற்றுக்கொள்வதில் இந்தியா பெரியளவில் ஆர்வம் காட்வில்லை. மற்றைய இரண்டு நாடுகளும் ஆர்வம் தெரிவித்திருப்பினும் இதுவரை கடைசியான முடிவைத் தெரிவிக்கவில்லை.

நடந்த பேச்சுவார்த்தைகளின்படி வியட்நாமுக்காக 5 பில்லியன் டொலர்களையும், இந்தோனேசியாவுக்காக 10 பில்லியன் டொலர்களையும் ஜி 7 நாடுகள் கொடுக்க முன்வந்திருக்கின்றன. காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் இயற்கை அழிவுகளைத் தடுத்து நிறுத்த நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவதும் அவசியம் என்பதைக்  கோட்பாட்டளவில் இந்தியா ஒத்துக்கொண்டாலும் அதற்காகத் தமக்கு கால அவதி வேண்டுமென்று பின்வாங்கிவிட்டது.

இதைத்தவிர, தென்னாபிரிக்கா தனது நிலக்கரிச் சுரங்கங்களை மூடுவதற்காக 8.5 பில்லியன் பெறுமதியான உதவியை ஜி 7 நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பெற்றுக்கொள்ளும்.  

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகள் குறிப்பிட்ட பண உதவியைச் செய்யத் தயாராக இருக்கும் நாடுகள். அவற்றுடன் நியூசிலாந்தும் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. குறிப்பிட்ட தொகையானது பொது நிறுவனங்களில் முதலீடுகளாகவும், தனியார் நிறுவனங்களுக்கு உதவிகளாகவும் கொடுக்கப்படும். அதைத் தவிர உதவி பெறும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவிகளும் கொடுக்கப்படும்.

காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி உலக நாடுகள் கலந்துரையாடும் COP27 மாநாடு நவம்பர் 6 ம் திகதி எகிப்தில் ஆரம்பமாகிறது. அதையொட்டி உலகின் பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்கும் என்னென்ன உதவி செய்யக்கூடும் என்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து நடந்துகொண்டிருக்கின்றன. நிலைமையின் அவசியத்தையும், அவசரத்தையும் புரிந்துகொண்டாலும் தமது நாடுகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைப் பணக்கார நாடுகள் செய்தாலே தம்மால் தமது வர்த்தக நடவடிக்கைகளைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதபடி மாற்றிக்கொள்ள முடியும் என்று வளரும் நாடுகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

தேவையான பண, தொழில்நுட்ப உதவிகளைச் செய்ய பணக்கார நாடுகளின் விருப்பம் சமீப மாதங்களில் உலகெங்கும் பரவியிருக்கும் பொருளாதார, வர்த்தகப் பின்னடைவால் குறைந்திருக்கின்றது. எனவே எகிப்தில் நடக்கவிருக்கும் COP27 மாநாட்டில் இதுபற்றிய காரமான உரையாடல்கள், பேரங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *