தேர்தலுக்குப் போகும் கொலம்பியாவில் பெற்றோல் கிணறுகளை மூடுவோம் என்கிறார் இடதுசாரி வேட்பாளர்.
ஞாயிறன்று கொலம்பியாவில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் எவருமே வெல்லப்போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் எரிநெய் உறிஞ்சலை நிறுத்தப்போவதாக உறுதி கொடுத்து வேட்பாளராக நிற்கும் குஸ்தாவோ பெத்ரோ முதலிடத்தில் வருவார் என்று கணிக்கப்படுகிறது.
கொலம்பியாவின் வடக்கில் வாழும் பழங்குடி மக்கள் இடதுசாரி வேட்பாளரான குஸ்தாவோ பெத்ரோவை ஆதரிக்கிறார்கள். சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொடும் சமயத்தில் கொலம்பியாவிலிருக்கும் எண்ணெய்க் கிணறுகளை மூடிவிடுவேன் என்கிறார் அவர். 2034 ம் ஆண்டுக்கு முன்னர் அதைச் செய்வேன் என்கிறார் அவர்.
எண்ணெய் உறிஞ்சலுக்காகத் தமது பிராந்தியங்களில் குவிந்திருக்கும் நிறுவனங்களால் ஏற்பட்டிருக்கும் சூழல் மாசுபடுத்தலால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியில் வாழும் மக்களிடயே பெத்ரோ ஆதரவு பெறுகிறார். கொலம்பியாவின் 40 விகிதமான ஏற்றுமதி வருமானம் எண்ணெய் விற்பனையாலேயே கிடைக்கிறது.
கருத்துக் கணிப்பீடுகளின்படி இரண்டாவது இடத்தில் வலதுசாரி வேட்பாளர் ஒருவரும், வலதுசாரித் தேசியவாதி ஒருவரும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஜூன் 19 ம் திகதி நடக்கும் இரண்டாம் சுற்றில் பெத்ரோ எதிர்கொள்வார்.
சாள்ஸ் ஜெ. போமன்