நவீன காலத்தில் இத்தாலியின் முதலாவது பாசிஸ்ட் தலைவரும், இத்தாலியின் முதலாவது பெண் பிரதமரும் ஒருவரே!

சமீபத்தில் நடந்த தேர்தலில் இத்தாலியப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றன நாட்டின் வலதுசாரிகள், பாசிஸ்ட்டுகளைக் கொண்ட கூட்டணி. அவைகளில் பெரிய கட்சியான பாசிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோர்ஜியா மெலோனியை நாட்டின் புதிய அரசாங்கத்தை நிறுவும்படி ஜனாதிபதி செர்ஜியொ மத்தரெல்லா கேட்டுக்கொண்டார்.

மெலோனி முன்வைத்த  மந்திரிசபையை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி மத்தரல்லா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதன் மூலம் இத்தாலிக்கு முதலாவது பெண் ஒக்டோபர் 22 ம் திகதியன்று கிடைத்தார். முதலாவது பெண் பிரதமர் ஆயினும் அதைச் சுட்டிக்காட்டி ஐரோப்பிய அளவில் அவர் மீது பாராட்டு மாலைகள் விழவில்லை. அதன் காரணம் அவரது அரசியல் கோட்பாடு ஆகும்.

மக்களை ஒடுக்கும் பாசிஸ்ட் அரசியல் கோட்பாட்டைக் கொண்ட முசோலினியால் ஆளப்பட்ட நாடு இத்தாலி. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அங்கே பாசிசம் ஒதுக்கப்பட்டு வந்தது. முதல் தடவையாக அந்தக் கோட்பாட்டைப் புகழ்ந்து பாடியவர் ஜோர்ஜியா மெலொனியாகும். அடுத்தடுத்துப் பல தேர்தல்களையும், புதுப்புதுக் கட்சிகளையும் எதிர்கொண்டு வாக்களித்து அக்கட்சிகள் ஆளும் தவணை முடியும் முன்னரே தமக்குள் அடிபட்டுக் கொள்வதைக் கண்டு ஜனநாயக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையிழந்திருப்பவர்கள் இத்தாலியர்கள்.   

ஆளும் கட்சியணியில் மெலோனியுடன் கைகோர்த்திருப்பவர்களும் ஐரோப்பிய அளவில் கடுமையாக விமர்சிக்கபட்டு வரும் வலதுசாரி, தேசியவாதிகளே. அவர்களில் மத்தியோ சல்வீனி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலி வெளியேறவேண்டும் என்று கோருபவர். மூன்றாமவர் 86 வயதான சில்வியோ பெர்லொஸ்கோனி. ஏற்கனவே 9 வருடங்களாக இத்தாலியின் பிரதமராக இருந்தவர். நீண்டகாலம் அங்கே பிரதமராக இருந்த சாதனையைச் செய்திருப்பினும் கற்பழிப்பு, ஊழல், ஏமாற்றுதல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டவர். 4 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் அவர் அதன் பின்னர் இரண்டு வருடங்கள் எவ்வித அரசியல் பதவிகளில் இருக்கக்கூடாதென்றும் விலக்கப்பட்டிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *