ஓய்வுபெற விரும்பிய ஜனாதிபதியையே மனம்மாற்றிப் பதவியில் தொடரவைத்தனர் இத்தாலியில்.

ஒரு வாரகாலமாக இத்தாலியப் பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி யார் என்பதற்கான பேச்சுவார்த்தைகளும், வாக்கெடுப்புக்களும் சனியன்று முடிவுக்கு வந்திருக்கின்றன. எட்டு வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு தவணை பதவியிலிருந்த சர்ஜியோவை மனம் மாற்றி மேலுமொரு வருடத்துக்குப் பதவியில் இருக்க ஒப்புக்கொள்ள வைத்தார்கள். 

பல அரசியல் வல்லுனர்கள் எச்சரித்தது போலவே போட்டியிலிருந்த தற்போதைய பிரதமர் ஜனாதிபதியானால் புதிய பிரதமராக யார் வருவது என்பதற்குக்கான தீர்வைக் கட்சிகளினால் காண முடியாத காரணத்தாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மாரியோ டிராகியே பல தடவைகள் மத்தரெல்லாவுடன் பேசி அவரை மேலுமொரு வருடம் இருக்கச் சம்மதிக்க வைத்ததாகப் பாராளுமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2023 ஜூன் மாதத்தில் இத்தாலியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதுவரை எந்தக் கட்சியையும் சாராத பொருளாதார வல்லுனர் டிராகியே பிரதமராக இருப்பதன் மூலம் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரம் உண்டாகவேண்டும் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணம். ஜனாதிபதி மத்தரெல்லா தான் விரும்பினால் எப்போதும் பதவியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்பதே தற்போதைய நிலைமை. தேர்தலின் பின்பு நாட்டின் அரசியல் நிலைமை மாறும்போது பிரதமராக வேறொருவர் பதவியேற்கும் நிலைமை வரவேண்டுமென்று அவர்கள் கணிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்