உக்ரேனின் சிறுபான்மையினர் காலங்காலமாக அங்கே வாழ்ந்தாலும் அவர்களின் மொழிகள் நசுக்கப்படுகின்றன.

உக்ரேன் மொழி மட்டுமே அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான மொழியாகும். 2017 இல் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டத்தின்படி செப்டெம்பர் 2018 முதல் கற்பித்தல் முழுவதும் அந்த மொழியிலேயே நடத்தப்படவேண்டும். இவ்வருடம் செப்டெம்பர் முதல் 1 – 4 ம் வகுப்புகளிலும் கற்பித்தல் உக்ரேன் மொழியில் மட்டுமே நடத்தப்படும். 

அங்கே வாழும் ரஷ்ய, ஹங்கேரிய, ருமேனிய, தத்தாரிய, போலாக்கியச் சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மொழி தனியாகக் கற்பிக்கப்படலாம். உக்ரேனின் கடுமையான மொழிக்கல்விச் சட்டங்கள் நாட்டின் சிறுபான்மையினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. நாட்டின் 60 % குடிமக்கள் உக்ரேனியர்கள். கருத்துக்கணிப்பீடுகளின்படி நாட்டின் சுமார் 60 % மக்கள் அரசின் உக்ரேனிய மொழியே உத்தியோகபூர்வமானது என்ற கட்டுப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.

உக்ரேன் அரசு தனது பக்கத்து நாடான லித்தாவனின் மொழிக்கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டித் தாமும் அதேபோலச் செய்வதாகக் குறிப்பிடுகிறது. லித்தாவன், சோவியத் யூனியனின் ஒரு பாகமாகச் சேர்க்கப்பட்ட பின்னரே அங்கே ரஷ்யர்கள் குடியேற்றப்பட்டார்கள். எனவே அந்த நாடு மீண்டும் சுதந்திர நாடானதும் தனது மொழியை மட்டுமே உத்தியோகபூர்வமான மொழியாக்கியது. உக்ரேனின் சரித்திரமோ வித்தியாசமானது. அங்குள்ள ஹங்கேரிய, ரஷ்ய, ருமேனிய, போலாக்கிய, தத்தாரியக் குடிமக்கள் உக்ரேனின் பூர்வீக காலத்திலிருந்தே அங்கே வாழ்ந்து வருபவர்களாகும்.

2019 ஜூலை மாதத்தில் உக்ரேனின் மொழிக்கட்டுப்பாடுகள் நாட்டின் ஊடகத்துறைக்கும் விஸ்தரிக்கப்பட்டன. பெருமளவில் விமர்சிக்கப்படும் அந்தச் சட்டங்களின்படி இவ்வருடம் ஜனவரி 17 ம் திகதி முதல் நாட்டின் சகல ஊடகங்களும் உக்ரேனிய மொழியிலேயே வெளியிடப்படவேண்டும். மற்றைய மொழிகளில் வெளியிடுகிறவர்களும் அவற்றை ஒரே சமயத்தில் ரஷ்ய மொழியிலும் வெளியிடுவது கட்டாயம். வெளியிடும்போது இரண்டு மொழிகளிலும் வடிவமைப்பு, அளவு எல்லாமே ஒன்றுபோலிருக்கவேண்டும்.

சஞ்சிகைகள், புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்கள் அவற்றை விற்பனை செய்யும் புத்தகக் கடைகளும் மொழிச்சட்டங்களுக்குள் அடங்கும். பதிப்பகங்கள் தாம் பதிப்பவைகளில் அரைவாசி உக்ரேன் மொழி வெளியீடுகளாகக் கொள்ளவேண்டும். விற்பனை செய்யும் புத்தகக் கடைகளிலும் விற்கப்படுபவைகளில் சரிபாதி உக்ரேன் மொழி வெளியீடுகளாக இருக்கவேண்டும்.

உக்ரேனின் கடுமையான மொழிச்சட்டங்களைச் சிறுபான்மையினர் தமது வாழ்நாளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடும் இடைஞ்சலாகவே காண்கிறார்கள். தாம் காலம் காலமாக வாழ்ந்த சொந்த நாட்டில் தாம் நசுக்கப்படுவதாக உணர்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்