உக்ரேன் துறைமுகத்திலிருக்கு தானியங்களைச் சுமந்துகொண்டு ஆபிரிக்காவுக்கு ஐ-நா-வின் கப்பல் பயணமாகவிருக்கிறது.

சில வாரங்களின் முன்னர் துருக்கியின் தலையீட்டால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் மூலம் உக்ரேனிலிருந்து உலக நாடுகளுக்குத் தானியங்களைக் கொண்டுசெல்லும் கப்பல்களின் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரிசையில் ஐ.நா-வின்  Brave Commander என்ற கப்பல் மூலம் தானியத் தட்டுப்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வறிய நாடுகளுக்கு அவற்றைக் கொண்டுசெல்லவிருக்கிறது.

உக்ரேன் துறைமுகத்திலிருந்து இதுவரை சுமார் இரண்டு டசின் தானியக் கப்பல்கள் புறப்பட்டுப் பயணமாகிக்கொண்டிருக்கின்றன. அவைகளில் எதுவும் தானியத் தட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய நாடுகளுக்குப் போகவில்லை. அந்த நிலைமையை மற்றவே ஐ.நா-வின் சர்வதேச உணவு உதவி நிறுவனம் குறிப்பிட்ட கப்பலை இயக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான போருக்கு முன்னர் அங்கிருந்து சுமார் 45 மில்லியன் தொன் தானியங்கள் உலகச் சந்தையில் வருடாவருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆபிரிக்காவின் மூலை எனப்படும் பகுதியில் நான்கு வருடங்களாகத் தொடர்ச்சியாக ஏற்பட்ட வரட்சியால் மக்கள் கடும் பட்டினியை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அப்பகுதி நாடுகளில் ஒன்றான ஜுபூத்தியை நோக்கி 23,000 தொன் தானியத்துடன் உக்ரேனிலிருந்து கப்பல் பயணமாகிறது. பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கும் அத்தானியம் விற்கப்படும். விரைவில் மேலுமொரு கப்பல் 7,000 தொன் தானியத்துடன் மேலுமொரு ஐ.நா-வின் தானியக் கப்பல் பயணமாகவிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *