இறைச்சிக்கான கோழிகளை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது மலேசியா.
தமது நாட்டுத் தேவைக்கான கோழி இறைச்சி தேவைக்கேற்றபடி கிடைக்கவேண்டும் என்பதற்காக மலேசியா தனது பக்கத்து நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் கோழி வளர்ப்புக்கான தீவனம் தேவையான அளவு கிடைக்காமல் போயிருப்பதே கோழி வளர்ப்பில் பெருமளவு தாக்கம் ஏற்படக் காரணமாகும்.
பக்கத்து நாடான சிங்கப்பூர் தமக்குத் தேவையான பல உணவுப்பொருட்களையும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. கோழி இறைச்சியைத் தேவையில் மூன்றிலொரு பங்கை மலேசியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர். மலேசியா எடுத்திருக்கும் முடிவால் சிங்கப்பூரில் கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. அதன் முக்கிய காரணம், பலர் பெருமளவில் கோழி இறைச்சியை வாங்கி உறைவிக்கும் பெட்டிக்குள் வைத்துக்கொள்கிறார்கள். எனவே, அதைத் தவிர்க்கும்படி சிங்கப்பூர் தனது குடிமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
தாய்லாந்து, புருனேய், ஜப்பான், ஹொங்கொங் ஆகிய நாடுகளும் மலேசியாவிலிருந்தே கோழி இறைச்சியைப் பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. அங்கும் அவ்விறைச்சிக்கான விலை பெருமளவில் உயர்ந்து, தட்டுப்பாடும் உண்டாகியிருக்கிறது. தனது நாட்டுக்குள் கோழி வளர்ப்பு அதிகரித்து, விலை இறங்கிய பின்னரே ஏற்றுமதி மீண்டும் வழக்கம்போலத் தொடரும் என்று தெரிவிக்கிறது மலேசியா.
சாள்ஸ் ஜெ. போமன்