தமிழின் தனித்துவத்தை இழக்காமல் ஆங்கிலத்தை பேசுங்கள்
தமிழின் பெருமை
முன்னுரை:
இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. அதில் மிகவும் தனித்தன்மையை கொண்டும்,தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது நம்முடைய தமிழ் மொழி.உலகில் காலத்தால் அழியாமல் இருக்கும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது நமது தமிழ். மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருக்கும் தமிழ் மொழியின் சிறப்பு எண்ணிலடங்கா கணக்கில் உள்ளது. தமிழ் மொழி 4000 ஆண்டுகள் பழமையானது என அறிஞர்கள் கருதுகின எனலாம். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என பாரதியார் கூறியுள்ளார். இக்கட்டுரையில் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி காண்போம்.
செம்மொழியான தமிழ் :
2004 இல் தமிழ் மொழி செம்மொழி என்ற பெருமையை பெற்றது. தொன்மை , தனித்தன்மை , பொதுமை பண்பு , நடுவு நிலைமை , தாய்மை , தனித்து இயங்கும் தன்மை , இலக்கண , இலக்கிய வளம் , கலை நயம் , உயர்ந்த சிந்தனை , மொழி கோட்பாடு போன்ற பண்புகளை கொண்டதால் தான் தமிழ் செம்மொழி என்ற பெயரை பெற்றுள்ளது. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை
வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி. செம்மொழி என்பதற்கு செம்மையான மொழி என்று அர்த்தம் .
தமிழின் சிறப்பு :
நம்முடைய மொழியில் எழுந்த இலக்கியங்கள் , இலக்கணங்கள் , புது கவிதைகள் , கட்டுரைகள் , நாவல்கள் , சிறுகதைகள் , தமிழ் வளர்ச்சியை அடைவதற்கு உதவியாக இருந்தது . வள்ளுவர் , கம்பர் , பாரதியார் , ஔவையார் போன்றோர்கள் தமிழ் மொழியை வளர்த்து வந்தார்கள். தமிழுக்கு “கதி” என இருவரை கூறுவர். கம்பர் திருவள்ளுவர் ஆவர் அவ்விருவரும். சிலப்பதிகாரத்தில் முப்பெரும் உண்மைகள் உள்ளன. அவை,
1 . அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
2 . உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3 . ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என உணர்த்தும் உண்மைகள் ஆகும்.
திராவிட மொழிக்குடும்பத்தில் நம்முடைய மொழி தாய்மொழியாக உள்ளது . இன்று உலகில் எழுந்த மொழிகள் பலவற்றிற்கு தமிழ் அடித்தளமாக உள்ளது . நம்முடைய தமிழர்கள் உடல் மண்ணுக்கும் உயிர் தமிழுக்கும் என்று வாழ்ந்து காட்டியவர்கள் . காரைக்குடியில் தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக தமிழ் தாய் எனும் பெயரில் கோவில் உள்ளது .
தமிழின் நிலை :
தமிழ் மொழிக்கு அக்காலத்திலும் சரி , இக்காலத்திலும் சரி பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது . பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தமிழ் மொழிக்கு வந்த அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி தமிழை வளர்த்து வந்தனர் . இப்பொழுதும் ஆங்கில மொழியின் தாக்கம் , வட மொழியின் ஆதிக்கம் எழுந்துள்ளது . நம்முடைய மொழியை காப்பது இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் கடமையாகும் . தமிழ் அழியாமல் பேணிக்காப்பதற்கு முடிந்த வரை தமிழ் மொழி கல்வியை படிப்பது நல்லது . ஆங்கிலம் படிப்பது தவறு அல்ல ஆனால் அது தமிழின் தனித்துவத்தை தடுக்காத அளவிற்கு இருக்க வேண்டும்.
முடிவுரை :
_எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு_ என்ற வரிகளுக்கு ஏற்ப நம்முடைய மொழி இன்று சிறப்பு வாய்ந்ததாக உள்ளது . அந்த சிறப்பை நாமும் காத்து தமிழின் வளர்ச்சிக்கு உறதுணையாக இருக்க வேண்டும் . தாய்மொழியான தமிழ் தொன்மையையும் சிறப்பையும் கொண்டு புகழின் உச்சியில் உள்ளது , அதனுடைய மேன்மைக்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் இலட்சியமாக இருக்க வேண்டும். தமிழ் என்றைக்கும் நிலைத்து இருக்க நாம் தமிழை வளர்க்க வேண்டும்.
வாழ்க தமிழ்…! வளர்க தமிழ்…!
எழுதுவது :
திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பண்டுதகாரன்புதூர் , மண் மங்கலம் , கரூர் – 6