பெண்ணின் தூண்டுதலால் அவள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக இளைஞனை விடுதலை செய்தார் நீதிபதி.
குடிபோதையில் இருந்த ஒரு பெண்ணின் தூண்டுதலால் தான் அவள் மீது இளைஞன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டான் என்று குறிப்பிட்டு வன்புணர்வுக்காகத் தண்டிக்கப்பட்ட இளைஞனை விடுதலை செய்தார் ஒரு இத்தாலிய நீதிபதி. அதன் மூலம் 2019 இல் அந்த இளைஞன் மீது விதிக்கப்பட்டிருந்த 2 வருடச் சிறைத்தண்டனை அகற்றப்பட்டது.
நண்பர்களான அவர்களிருவரும் துரின் நகர மதுச்சாலை ஒன்றில் இருந்தபோதே கழிப்பறைக்குள் பாலியல் வன்புணர்வு நடந்ததாகக் இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை என்று அப்பெண் தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
“அளவுக்கதிகமான மதுவைக் குடித்திருந்த பெண்ணின் சைகைகளால் பாதி திறந்திருந்த கழிப்பறைக்கு வெளியேயிருந்த இளைஞன் தனது பாலியல் நடத்தைக்குத் தூண்டப்பட்டான்,” என்கிறது தீர்ப்பு.
நீதிபதியின் தீர்ப்பு இத்தாலிய அரசியல் வட்டாரங்களிலும், பெண் உரிமை அமைப்புகளிடையேயும் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது. நீண்டகாலமாகச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட பாலியல் சம உரிமை, பொறுப்பு ஆகியவற்றை இந்தத் தீர்ப்பு உதைத்துத் தள்ளியிருக்கிறது என்று பல அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இத்தாலிய வழக்கறிஞர்கள் அமைப்பு அந்தத் தீர்ப்பைத் தவறான முன்னுதாரணம் என்று சுட்டிக்காட்டி நீதிமன்றங்களின் உயரதிகாரத்திடம் முறையீடு செய்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்