மாஜி பிரதமரான கணவன் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் மனைவிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி மீது லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அரச திட்டங்களை நிறைவேற்ற வரும் நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றதற்காக ரொஸ்மா ரஸாக்குக்கு 10 வருடம் சிறைத்தண்டனை வழங்கியது கோலாலம்பூர் நீதிமன்றம். ஒரு வாரத்துக்கு முன்னரே அவரது கணவர் மீதான ஊழல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட 12 சிறைத்தண்டனையை அவர் அனுமதிக்கவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறுதியாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் சரவாக் பிராந்தியத்தில் பாடசாலைகளுக்கு சூரிய சக்தியிலான மின்சாரத்தை வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்ட மூன்று நிறுவனங்களிடம் ரொஸ்மா ரஸாக் சுமார் 42 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கியதாக அரச சார்பில் குறிப்பிடப்பட்டது. ரொஸ்மா மூன்று சமயங்களில் லஞ்சம் பெற்றிருப்பது சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறிப்பிட்டார்.
10 வருடச் சிறைத்தண்டனை தவிர 216 மில்லியன் டொலர் பெறுமதியான தண்டமும் ரொஸ்மாவுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் எந்த ஒருவர் மீதும் விதிக்கப்படாத மிக அதிக தொகைத் தண்டம் அதுவாகும். அவர் மீது விதிக்கப்பட்ட தீர்ப்புகள் மீதான மேன்முறையீடுகள் நடக்க மேலும் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அவர் மீதுள்ள மற்றைய வழக்குகளுக்குமான சிறைத்தண்டனை வெளியாகும்போது அவர் 20 வருடம் வரையிலான சிறைத்தண்டனை பெறலாம் என்று கருதப்படுகிறது.
70 வயதான ரொஸ்மா ரஸாக்கும், நஜீப் ரஸாக்கும் 2018 இல் தேர்தலில் தோற்றவுடன் அவர்கள் தப்பியோடிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடைய விமானம் உட்படச் சகல சொத்துக்களையும் பொலீசார் சோதனை செய்தபோது பல மில்லியன்கள் டொலர் நோட்டுக்கள், மிகப் பெறுமதிவாய்ந்த கைக்கடிகாரங்கள் உட்பட பல பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்