மியான்மாரின் கவிழ்க்கப்பட்ட தலைவிக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை, கடின உழைப்புடன்!
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மியான்மாரில் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசமைத்தவர்களைக் கவிழ்த்துவிட்டுத் தலைமையைக் கைப்பற்றியது நாட்டின் இராணுவத் தலைமை. அதற்கான காரணமாக, அரசில் தலைமைப்பதவியிலிருந்து பலர் மீது அடுக்கடுக்காகப் பல குற்றங்களைச் சுமத்தி அவர்களுக்குத் தண்டனைகளையும் கொடுத்து வருகிறது இராணுவம். அவ்வரிசையில் முன்னாள் பிரதமர் ஔன் சான் சூ ஷிக்கு மேலும் 3 வருடத் தண்டனையை இராணுவ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.
மியான்மாரின் சகல பிராந்தியங்களிலும் மக்கள் இராணுவ ஆட்சியை எதிர்த்துக் காட்டிவரும் போராட்டங்களை அடக்க இராணுவம் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் எதிர்ப்பைக் காட்டிய சிலருக்கு மரண தண்டனை விதித்து அது நிறைவேற்றவும் பட்டது. ஆசியன் மாநாட்டில் சக ஆசிய நாட்டுத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் இராணுவ அரசு கிஞ்சித்தும் செவிசாய்க்கவில்லை.
வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஔன் சான் சூ ஷி மீது லஞ்ச ஊழல், அரசாங்கச் சட்டங்களைத் தவறாகப் பாவித்தல், வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி தடுக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தல், வன்முறையைத் தூண்டி விடல் போன்று வெவ்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு அவைகளுக்காக வெவ்வேறு விசாரணைகளை இராணுவ நீதிமன்றத்தில் நடத்தித் தண்டனையும் கொடுத்து வருகிறது. இதுவரை மொத்தமாக 17 வருடங்கள் சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று நடந்த நீதிமன்ற விசாரணை ஔன் சான் சூ ஷியும் அவரது கட்சிச் சகாக்களும் நவம்பர் 2020 இல் நாட்டில் நடாத்தப்பட்ட தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்தார்கள் என்பதாகும். அவர்கள் வாக்கு எண்ணுவது போன்ற தேர்தல் நடவடிக்கைகளில் மோசடி செய்தே பெரும் வெற்றியைப் பெற்றார்கள் என்பது இராணுவத்தின் குற்றச்சாட்டாகும். அதற்குத் தண்டனையாக அவருக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விட வித்தியாசமாக இம்முறை 3 வருடங்கள் கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை என்கிறது தீர்ப்பு.
ஔன் சான் சூ ஷியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நடப்பது பற்றி எதையும் வெளியே சொல்லத் தடை செய்யப்பட்டிருப்பதால் இத்தண்டனையின் விபரங்கள் பற்றி இதுவரை எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்