“மனிதர்களைப் போலவே நாய்களும் ஆனந்தக்கண்ணீர் விடுவதுண்டு,” என்கிறது உயிரியல் ஆராய்ச்சி.
மனிதர்கள் மட்டும் தமக்குப் பிடித்தமானவர்களை விட்டுப் பிரிந்திருந்துவிட்டு நீண்ட காலத்தின் பின்னர் சேரும்போது ஆனந்தக் கண்ணீர் விடுவதில்லை, நாய்களும் அதைச் செய்கின்றன என்கிறது Current Biology சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு. அன்பைப் பிரதிபலிக்கும் ஹோர்மோன் தான் oxytocin நாய்கள் தமது உரிமையாளர்களைப் பிரிந்திருந்து சந்திக்கும்போது கண்ணீர் உதிரவைக்கின்றன.
ஜப்பானியப் பல்கலைக்கழகமொன்றால் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி Takefumi Kikusui என்பவரால் நடத்தப்பட்டது. அவரது குழுவினர் நாய்கள் தமது உரிமையாளர்களை நீண்டகாலத்தின் பின்னர் சந்திக்கும் சமயத்தில் அவைகளின் கண்களில் காகிதக்கீற்றுக்களைப் பொருத்தியிருந்தனர். நாய்கள் 5 – 7 மணி நேரத்துக்குப் பின்னர் சந்திக்கும்போது அவர்களுடைய மகிழ்ச்சி கண்ணீராக உருவாக ஆரம்பிக்கிறது.
“இதுபோன்று எந்த விலங்குகளும் சந்தோசமான சந்தர்ப்பத்தில் கண்ணீர் விடுவதைக் கண்டதில்லை,” என்கிறார் ஆராய்ச்சியாளர்.
நாய்கள் தமக்கு அறிமுகமான மற்ற மனிதர்களைப் பிரிந்து சந்திக்கும்போதும் கண்ணீர் விடுகின்றனவா என்று ஆராயப்பட்டது. உரிமையாளர்களைச் சந்திக்கும்போதே நாய்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விடுகின்றன என்பதே அவர்களுடைய முடிவாகும்.
தம்மைப் பிரிந்திருந்து சந்திக்கும் நாய்களின் உணர்ச்சிவசப்படுதல், கண்ணீர்விடுதல் ஆகியவற்றால் அதன் உரிமையாளர்களுடைய அன்பு மேலும் பெருகுகிறது. அவர்கள் தமது நாய்கள் மீது மேலும் அன்பு செலுத்துவதற்கு, கவனிப்பதற்கு அது காரணமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்