பாகிஸ்தானில் ஒரே நாளுக்குள் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு உட்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு காணாத மழைவீழ்ச்சியாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானில் மக்கள் நீர் வழியாகப் பரவும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவு ஒரு பக்கமிருக்க கடந்த 24 மணி நேரத்துக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் பிராந்தியங்களில் வயிற்றுப்போக்கால் சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நிவாரண உதவி நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்னும் எட்டவில்லை. அத்துடன் படிப்பறிவும் இல்லாத கிராமப்பகுதிகளில் வாழும் மக்கள் தேங்கியிருக்கும் வெள்ளத்தின் நீரைத் தமது தேவைகளுக்குப் பாவிக்கிறார்கள். அதனாலேயே வயிற்றுப்போக்கு, கண்களிலும், தோலிலும் அரிப்பு ஆகிய நோய்கள் விரைவாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விபரங்களின்படி சுமாஅர் 6.4 மில்லியன் பாகிஸ்தானியர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணம் தேவையான நிலையிலிருக்கிறார்கள்.  வெள்ளத்தால் வீடுகளை இழந்து வெவ்வேறு முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பவர்களில் சுமார் 70,000 பேர் கர்ப்பிணிப் பெண்களாகும். அவர்கள் வரும் ஒரு மாதத்துக்குள் பிள்ளை பெறவிருப்பவர்களாகும்.

உடனடியான வெள்ள நிவாரணத் தேவைகளைவிட வெள்ளம் வடிந்தபின்னரும் மக்களைப் பாதிக்கக்கூடிய பல காரணங்களும் உண்டாகியிருக்கின்றன. பஞ்சாப், சிந்து பிராந்தியங்களில் நெற்பயிர், பருத்தி வயல்கள் நீருக்குள் மூழ்கியிருக்கின்றன. அது அப்பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறது. எனவே வரவிருக்கும் அறுவடைக்காலத்தில் அப்பகுதி மக்களுக்குப் பெரும் அழிவைக் கொடுக்கும் காலமாக இருக்கும். 

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *