சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும் அரசியல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அச்சித்திரங்களைப் அச்சஞ்சிகை மீண்டும் பிரசுரித்தது. கருத்துச் சுதந்திரம் என்ற நோக்கில் அதைப் பிரெஞ்சுப் பிரதமர் ஆதரித்தார்.  

https://vetrinadai.com/news/wyork-cartoon/

பிரெஞ்சுப் பிரதமரின் அந்த நடவடிக்கையை எதிர்த்துப் பாகிஸ்தானுக்கான பிரெஞ்சுத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி தஹ்ரீக் ஏ லபாய்க் இயக்கம் பாகிஸ்தானியர்களைத் தூண்டிவிட்டிருக்கிறது. அதனால் நாடெங்கும் மக்கள் கொதிந்தெழுந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்ட குற்றத்துக்காக அவ்வியக்கத்தின் தலைமைப் பிரசாரகரான கதீம் ரிஸ்வியைப் பாகிஸ்தானிய அரசு கடந்த வாரம் கைது செய்திருக்கிறது.  

அந்தக் கைதினால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. ஏற்கனவே முஹம்மதுவைக் கேலி செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு மரண தண்டனை வரை கொடுக்கும் பாகிஸ்தானில் இஸ்லாமியத் தீவிரவாதம் இதனால் மேலும் தூண்டப்பட்டிருக்கிறது. ரிஸ்வியைக் கைது செய்ததை எதிர்த்தும் நாடெங்கும் வன்முறை மேலும் அதிகரித்து வருகிறது. 

“யூத அழிப்பை மறுப்பவர்களைச் சில ஐரோப்பிய நாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக்கியது போல இஸ்லாத்தையும் அதன் தூதரையும் கேலி செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும்,” என்று இம்ரான் கான் ஐரோப்பிய நாடுகளை விமர்சிக்கிறார். 

அதே சமயம் தஹ்ரீக் ஏ லபாய்க் இயக்கத்தின் அரசியல் கட்சியைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தத் தயாராகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஒரு சிறிய கட்சியாக இருப்பினும் தமது ஆதரவாளர்கள் மூலம் பெருமளவில் நாடெங்கும் குழப்பங்களை உண்டாக்கி வருவதில் அவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அந்த இயக்கம் இம்ரான் கானுக்கு நீண்ட காலமாகவே தலையிடியாக இருந்து வருகிறது. 

நேற்றைய தினம் நடந்த அவர்களின் பேரணிகளின் போது சுமார் பத்து பாக்கிஸ்தானியப் பொலீசாரை அவ்வியக்கத்தினர் கடத்திச் சென்றார்கள். லாகூரில் நடந்த அந்தச் செயலின் பின்னர் அப்பகுதியினருடன் பேரம் பேசிப் பொலீசார் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *