24 வருடங்களுக்குப் பின்னால் ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருக்கிறது.

ஒரு நாட்டின் தலைவர் பாகிஸ்தானுக்கு வருவது போன்ற பாதுகாப்பு அங்கே வந்திறங்கிய ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழுவினருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலீசாரும், இராணுவத்தினரும் விமான நிலையத்தையும் விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிக்கு அவர்கள் பயணித்ததையும் காத்து நின்றனர். தமக்கான பாதுகாப்புப் பலமாக இருந்ததையும் அது தமக்குத் திருப்தியைக் கொடுத்ததாகவும் ஆஸ்ரேலியக் குழுவினரின் தலைவர் பாட் கும்மின்ஸ் சிலாகித்துக் குறிப்பிட்டார். மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடக்கவிருக்கும் முதலாவது மோதலுக்குப் பயிற்சி செய்ய முன்னர் விளையாட்டு வீரர்கள் தம்மை 24 மணி நேரம் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கான கொவிட் 19 பரிசீலனைகள் அச்சமயத்தில் நடந்தேறும்.

2009 இல் சிறீலங்காவின் கிரிக்கட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றபோது அவர்கள் பயணித்த பேருந்து மீது லாகூரில் நடாத்தப்பட்ட  தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னர் போட்டி விளையாட்டுக்களுக்காக எந்த நாட்டினரும் பாகிஸ்தானுக்குப் போக மறுத்தார்கள். அதனால் பாகிஸ்தான் தனது நாட்டு மைதானமாக எமிரேட்ஸ் நாட்டிலேயே மற்றைய நாட்டினரை எதிர்கொண்டு வந்தது. அந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த வருடம் நியூசிலாந்துக் கிரிக்கட் குழுவினர் முதல் முறையாக பாகிஸ்தானில் விளையாட வந்தனர். அங்கே அவர்கள் தமது முதலாவது மோதலுக்கு முதல் தமது பாதுகாப்புக்கு இடையூறு இருப்பதாகத் தெரியவந்து உடனடியாகப் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.

ராவல்பிண்டிக்குப் பின்னர் கராச்சியிலும் லாலூரிலும் ஒரு நாள் மோதல்கள் நடைபெறும். அவற்றைத் தவிர Twenty20 ஒன்றிலும் இரண்டு நாட்டுக் குழுவினரும் மோதுவார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்