2 ம் உலக மகாயுத்தத்தப் பாதிப்புக்களுக்காக ஜேர்மனியிடம் நஷ்ட ஈடாகப் போலந்து கேட்கும் தொகை 1,400 பில்லியன் டொலர்கள்.

இற்றைக்கு 83 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியின் படைகள் போலந்துக்குள் புகுந்து தமது ஆக்கிரமிப்பை ஆரம்பித்தன. அதனால் ஏற்பட்ட சேதங்களை, இழப்புகளைக் கணக்கிட்டு நஷ்ட ஈடு கோருகிறது போலந்து. ஜேர்மனியிடம் கோரப்படும் தொகை சுமார் 1,400 பில்லியன் டொலர்களாகும். சரித்திர ஆராய்ச்சியாளர்களும், பொருளாதார விற்பன்னர்களும் கொண்ட குழுவொன்று பல வருடங்களாக நஷ்ட ஈட்டுத் தொகையைக் கணக்கிட்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரில் போலந்துக்குள் அன்றைய நாஸிப்படைகள் நுழைந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சியொன்றில் போலந்தின் ஆளும் கட்சித் தலைவர் ஜேர்மனியிடம் கோரப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை பற்றி வெளியிட்டார். போலந்துக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இருப்பினும் அவர்களின் பின்னாலிருந்து நாட்டை உண்மையிலேயே ஆளுபவர் என்று குறிப்பிடப்படும் யாரொஸ்லாவ் கஸின்ஸ்கி தனது உரையில், “ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு மிகப் பெரும் குற்றமாகும். ஆக்கிரமிப்பு ஆட்சி போலந்தில் மிகவும் கொடுமையாக இருந்தது. அதன் விளைவுகளை நாட்டு மக்கள் தொடர்ந்தும் அனுபவித்து வருகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

போலந்தின் ஆளும் கட்சி ஜேர்மனியிடம் பொருளாதார நஷ்ட ஈடு கோருவது இது முதல் தடவையல்ல. ஜேர்மனியின் நடத்தைக்காகப் போலந்து நஷ்ட ஈடு கோருவது நியாயமானதே என்று குறிப்பிடும் அக்கட்சியினரின் பொருளாதார நஷ்ட ஈட்டுக் கோரிக்கையை இதுவரை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளவில்லை. 

அன்றைய நாஸிகளின் நடவடிக்கைகள் ஜேர்மனியின் சரித்திரத்தில் ஒரு கறுப்புப் பக்கம் என்று ஒத்துக்கொள்கிறது. போருக்குப் பின்னர் அன்றைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஜேர்மனி பல தடவைகள் பொருளாதார நிவாரணங்களும், உதவிகளும் செய்திருப்பதாகச் சொல்லி வருகிறது. 

தற்போதைய போலந்தின் ஆளும் கட்சியின் காலத்தில் போலந்துக்கும், ஜேர்மனிக்குமான அரசியல் தொடர்புகளில் முரண்பாடுகள் உள்ளன. ஜேர்மனி தனது நாட்டின் அரசியலில் மூக்கை நுழைத்து வருவதாக கஸின்ஸ்கி பல தடவைகள் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கஸின்ஸ்கியின் கோரிக்கை தனது கட்சிக்குப் போலந்தில் ஆதரவைத் தேடும் நோக்கமே என்கிறது போலந்தின் எதிர்க்கட்சி.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *