இஸ்ராயேலுக்கு உதவிய இருவர் உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஹமாஸ் அறிவித்தது.
பாலஸ்தீனப் பிராந்தியமான காஸா பகுதியில் ஆட்சியிலிருக்கும் தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்க அரசு நீண்ட காலத்தின் பின்னர் ஐந்து பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் இருவர் இஸ்ராயேலுக்கு உளவு பார்த்து உதவியதாகவும் மற்ற மூவர் கொலைக் குற்றங்கள் செய்தவர்கள் என்றும் ஹமாஸ் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தது.
இஸ்ராயேலுக்காக உளவு பார்த்தவர்கள் 1968, 1978 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் என்றும் அவர்கள் இஸ்ராயேலுக்குக் கொடுத்த விபரங்களைப் பயன்படுத்தியே தமது ஏவுகணை சுடும் இடங்களை இஸ்ராயேல் அழித்ததாகவும், சில முக்கிய பாலஸ்தீனப் போராளிகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. உளவுபார்த்ததற்காகக் கொல்லப்பட்டவர்களின் முதலெழுத்துக்களும், பிறந்த ஆண்டுகளும் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டன. அவர்களுடைய முழுப்பெயர் மற்றும் விபரங்களை வெளியிடவில்லை.
ஹமாஸ் அரசின் மரண தண்டனைகள் பகிரங்கமாகப் பல நூறு பேர்கள் பார்க்கத்தக்கதாகவே நிறைவேற்றப்பட்டன. அவர்கள் எல்லோருக்கும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டதாக ஹமாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனாவின் மற்றொரு பகுதியை ஆண்டுவரும் பத்தா அமைப்பினர் தமது பகுதியில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதில்லை. மரண தண்டனைகளுக்கு எதிரான ஐ. நா-வின் பட்டயத்தில் அப்பகுதியினரின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கைச்சாத்திட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்