சகோதரியின் மருத்துவத்துக்காக நேரடி ஒளிபரப்புடன் வங்கியைக் கொள்ளையடித்த லெபனான் பெண்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் பெண்ணொருத்தி வங்கிக்கொள்ளையொன்றைப் பகிரங்கமாகச் செய்திருக்கிறாள். சுகவீனமுற்ற சகோதரியின் மருத்துவச் செலவுக்காகவே வங்கியில் கொள்ளையடிப்பதாக அதைப் படமெடுத்து நேரடியாக ஒளிபரப்பியபடி அதைச் செய்திருக்கிறார்கள்.

“எனது பெயர் சாலி ஹவீஸ், சுகவீனமுற்ற எனது சகோதரியின் பணம் இந்த வங்கியிலிருக்கிறது. அதை எடுக்கவே நான் வந்தேன்,” என்று பெருங்குரலில் கத்தியபடி அவள் வங்கியிலிருந்து ஆயிரக்கணக்கான டொலர்களை எடுத்துக்கொண்டு கண்ணாடி சாளரத்தின் மூலம் தப்பியோடினாள். அவளுடன் வந்திருந்த இன்னொரு பெண்ணும் சுமார் 13,000 டொலரைப் படத்தில் காட்டி அவ்வங்கியிலிருந்து எடுத்ததாகச் சொன்னாள். வங்கிக்குள் பெற்றோல் ஊற்றப்பட்டிருந்தது, ஒரு துப்பாக்கியும் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.

சிறீலங்காவின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் மோசமாக முன்னரே அதைப் போன்ற நிலைமைக்கு வந்து அதையும் தாண்டி எதுவுமே இயங்காத நிலையை லெபனான் அடைந்திருக்கிறது. தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் ஏற்கனவே ஊழலினால் நாட்டைச் சூறையாடிய அரசியல்வதிகள் கணிசமான அளவு வெற்றியெடுத்ததால் அங்கே ஒரு அரசாங்கம் உருவாக்க முடியாமல் நாடு முடக்கப்பட்டிருக்கிறது.  

லெபனான் வங்கிகளில் மக்கள் வைத்திருக்கும் பணத்தையும் வெளியே எடுக்க முடியாதபடி அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு நிலவுகிறது. லெபனான் பணத்தின் பெறுமதியோ படு வேகமாகக் குறைந்துகொண்டே இருப்பதால் மக்கள் தமது அன்னியச் செலாவணிக்கணக்கிலிருக்கும் பணத்தை லெபனான் நோட்டுகளில் எடுக்க மறுக்கிறார்கள். வங்கிகளோ அன்னியச் செலாவணியில் பணத்தைக் கொடுக்க மறுப்பதால் இதேபோன்ற வங்கிக்கொள்ளைகள் இவ்வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடந்திருக்கின்றன.

தனது சகோதரிக்காக வங்கிக்கொள்ளையடித்த பெண்ணை மக்கள் போற்றுகிறார்கள். அதே போலவே இதற்கு முன்னர் வங்கிகளில் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிப் பணத்தை எடுத்தவர்களையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *