ஜோ பைடன் பிரத்தியேக வாகனத்தில் போகும்போது நாம் ஏன் பேருந்தில் போகவேண்டுமென்று கேள்வியெழுப்பும் உலகத் தலைவர்கள்.
பிரிட்டிஷ் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும் உலகத் தலைவர்கள், பிரதிநிதிகளைச் “சொந்த விமானத்தில் வராதீர்கள், உங்கள் பிரத்தியேக வாகனத்தைக் கொண்டுவராதீர்கள்,” என்று பிரிட்டன் கோரியிருந்தது. ஆனால், அமெரிக்கா, இஸ்ராயேல் ஜனாதிபதி ஆகியோர் தமது விமானங்களில் வந்து தமக்கான பிரத்தியேக வாகனங்களில் மேற்கு லண்டனிலிருந்து வெஸ்ட் மினிஸ்டர் அபிக்குப் பயணிக்கவிருக்கிறார்கள்.
திங்களன்று நடக்கவிருக்கும் மறைந்த மகாராணியின் இறுதி யாத்திரை நிகழ்ச்சியில் பங்குபற்ற சுமார் 200 நாடுகளிலிருந்து தலைவர்களும், பிரதிநிதிகளும் வரவிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு மட்டும் பிரத்தியேக வாகனங்களைப் பாவிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது பற்றி உலகத் தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி உண்டாகியிருக்கிறது.
ஜி 7 நாட்டுத் தலைவர்கள் சிலர் உட்பட வேறு சில தமது வயது, உடல்நிலை ஆகியவற்றைக் காரணம் காட்டிப் பிரத்தியேக வாகனங்களைப் பாவிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு உலகத் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்திருக்கும் பேருந்தில் பயணிப்பது நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்வதற்கு வாகாக இருக்கும் என்கிறது பிரிட்டன். தமக்காக பிரத்தியேக அனுமதி கேட்டிருக்கும் நாட்டின் பிரதிநிதிகளுக்கான பதில்களை இதுவரை பிரிட்டிஷ் உள்துறை கொடுக்கவில்லை என்றும் முணுமுணுக்கப்படுகிறது.
ஜப்பானியச் சக்கரவர்த்தி நருஹீட்டோ பிரிட்டனின் பரிந்துரையை ஏற்று எல்லோருடனும் பேருந்தில் செல்ல ஒப்புக்கொண்டிருக்கிறார். துருக்கிய ஜனாதிபதி இறுதி யாத்திரைக்கான தனது திட்டத்தை நிறுத்திவிட்டுத் தனது வெளிவிவகார அமைச்சரை அனுப்பிவைத்திருக்கிறார்.
பேருந்துகளில் இறுதியாத்திரைக்குப் பயணிப்பதைப் பற்றிய அதிருப்திகளுக்கு எதிராகப் பகிரங்கமாகக் குரல்கொடுத்திருப்பவர் நியூசிலாந்தின் பிரதமர் யசிந்தா ஆர்டன் ஆகும். “கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டுக்கு வந்திருந்தபோதும் நாம் ஒன்றாக பேருந்துகளில்தான் பயணித்தோம். அது ஒரு நல்ல ஏற்பாடு, நாம் நிலைமைக்கேற்ற நடந்துகொள்பவர்கள்,” என்று பேட்டியொன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்