பூமியதிர்ச்சியால் கலகலத்து விழுந்த கட்டடங்களிடையே மாட்டிக் கொண்டவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் இறந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது. புவிமட்டத்தின் கீழே சுமார் 17.9 கி.மீ ஆழத்தில் திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி இரண்டு புவித்தட்டுக்கள் எதிரெதிர்த் திசையை நோக்கி நகர்வதால் ஏற்பட்டது. அப்படியான பூமித்தட்டுகள் மூன்று மீற்றர் தூரம் நகர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. விளைவாக இறந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மீட்புப் பணியாளர்களும், சாதாரண மக்களும் சேர்ந்து இடிந்து விழுந்த கட்டடங்களின் கீழே மாட்டிக்கொண்டவர்களைத் தொடர்ந்தும் ஆங்காங்கே மீட்டு வருகிறார்கள்.
துருக்கிய ஜனாதிபதி நாட்டில் மூன்று மாதங்களுக்கு அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டுத் தகுந்த உதவிகளைச் செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
துருக்கிய பக்கத்தில் பூமியதிர்ச்சி சம்பந்தப்பட்ட தயார்நிலை நிலவுவதால் அவர்களுடைய பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மீட்புகள், இறந்த உடல்களை வெளியெடுத்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றவை வெற்றிகரமாக நடந்து வருகின்றன. வெளிநாடுகளிலிருந்தும் உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியிருக்கிறது. 1999 இல் Düzce நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இறந்தோர் எண்ணிக்கை சுமார் 17,000 ஆகும். அது திங்களன்று ஏற்பட்டதைவிடக் குறைந்த சக்தியுள்ள பூமியதிர்ச்சியாகும். எனவே பூமியதிர்ச்சியின் சக்தியைப் பொறுத்தவரை திங்களன்று ஏற்பட்டது துருக்கியின் மோசமான பூமியதிர்ச்சியாகும்.
போரால் பாதிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகியிருக்கும் சிரியாவிலோ நிலைமை படு மோசமாகியிருக்கிறது. அங்கேயிருந்து 2,500 பேருக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். ஆனால், அவை அரசக் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களில், மீட்புப்படையினர், உதவி அமைப்புக்கள் எட்டக்கூடிய பிராந்தியங்களில் இறந்தோரின் எண்ணிக்கை மட்டுமே. பாதிக்கப்பட்ட பெரும்பகுதி அரசுக்கு எதிராகப் போரிடும் இயக்கங்களின் கையிலிருக்கிறது. அவற்றில் ஒரு பகுதியைத் தொடர்ந்தும் மீட்புப்படையினரால் எட்டமுடியவில்லை. எனவே, அங்கே பலர் தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டிருக்கலாம் என்றும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்