கரீம் அப்துல் ஜப்பாரின் சாதனையை முறியடித்து அவரிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்டார் லிபுரோன் ஜேம்ஸ்.
அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாட்டில் இதுவரை இருந்த சாதனையொன்றை உடைத்துச் சரித்திரம் படைத்திருக்கிறார் லிபுரோன் ஜேம்ஸ். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் குழுவைச் சேர்ந்த லிபிரோன் ஜேம்ஸ் அச்சாதனையைச் செய்யும்போது அரங்கில் முன்னாள் சாதனையாளர் கரீம் அப்துல் ஜப்பாரும் சமூகமளித்திருந்தார். (NBA) போட்டிகளில் ஒன்றான அந்த மோதலில் ஒக்லஹாமா சிட்டி தண்டர் அணியினருடன் லேக்கர்ஸ் மோதியது.
பெப்ரவரி 07ம் திகதி நடந்த அந்த மோதலில் லிபுரோன் ஜேம்ஸ் சரித்திரம் படைப்பார் என்று விசிறிகளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதை ஊடகங்களும் ஊதிப்பெரிதாக்கவே விளையாட்டைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகளின் விலை 45,000 டொலர்களைத் தாண்டியிருந்தது.
மோதலில் லேக்கர்ஸ் அணி மோதலை 133–130 என்ற வித்தியாசத்தில் வென்றாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றைக் கொடுக்கவில்லை லிபுரோன் ஜேம்ஸ் 38 புள்ளிகளைத் தனது அணிக்கு வென்றெடுத்தார். அதேசமயம் தனது விளையாட்டுச் சரித்திரத்தில் 38,888 புள்ளிகளைத் தொட்டு NBA சரித்திரத்தில் தனது பெயரைப் பொன்னெழுத்துக்களால் பொறித்துக்கொண்டார்.
1984 இல் கரீம் அப்துல் ஜப்பார் தனக்கு முன்னால் NBA இல் அதிக புள்ளிகள் எடுத்திருந்த சாதனையைச் செய்த வில் சேம்பர்லின் இடத்தைப் பிடித்தார். 38 வயதான லிபுரோன் ஜேம்ஸ் அதை 38 வருடங்களுக்குப் பின்னர் 38 புள்ளிகளைப் போட்ட மோதலில் முறியடித்திருக்கிறார். வில் சேம்பர்லின், அப்துல் ஜப்பார், லிபுரோன் ஜேம்ஸ் ஆகிய மூவருமே லேக்கர்ஸ் அணியைச் சேர்ந்தவர்களாகும். லிபுரோன் ஜேம்ஸ் NBA மோதல்களில் 20 தவணைகளாக விளையாடி வருகிறார், தொடர்ந்தும் விளையாடவிருக்கிறார்.
“இப்படியொரு சாதனையை நான் செய்வேனென்று நான் எண்ணியதேயில்லை. அதை சாதனையாளர் அப்துல் ஜப்பாரின் முன்னாலிருக்கும்போதே செய்ய முடிந்திருப்பது பெரும் பாக்கியம். என்னை என்று பாராட்டி முன்னெடுத்துச் செல்லும் எனது விசிறிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் லிபுரோன் ஜேம்ஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்