சூறாவளி கபிரியேல் ஏற்படுத்திய அழிவுகள் நியூசிலாந்துக்குப் பல பில்லியன் டொலர்கள்!
கடந்த வாரம் நியூசிலாந்தைத் தாக்கிய மோசமான சூறாவளிக்காக நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலைமை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டப்பட்டிருக்கிறது. சூறாவளியால் ஏற்பட்டுத்தப்பட்ட வெள்ளம், கடும் காற்று ஆகியவற்றின் பாதிப்பால் 11 பேர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் உண்டாகிய அழிவுகளோ பல பில்லியன் டொலர்கள் பெறுமதியானவை என்று நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹொப்கின்ஸ் தெரிவித்தார்.
நியூசிலாந்தின் சரித்திரத்தில் அவசரகால நிலைமை மூன்றாவது தடவையாக இந்தச் சூறாவளிக்காகவே அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கிரைஸ்ட்சேர்ச் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், கொவிட் 19 தொற்று ஆகியவைக்காக மட்டுமே நாட்டில் அச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நிதியமைச்சர் கிராண்ட் ரொபேர்ட்சன் புனருத்தாரண வேலைகளுக்காக சுமார் 187 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருக்கிறார். ஏற்பட்ட அழிவுகளை முழுவதுமாகச் சீர்செய்வதற்கு வேண்டிய மொத்தத் தொகையில் அது ஒரு சிறு பகுதியே என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டன், நாட்டின் பெரிய நகரான ஓக்லாந்து ஆகியவைகளைக் கொண்ட வடக்கிலிருக்கும் தீவுப்பகுதியே பெருமளவில் பாதிக்கப்பட்டது. அங்கேயே நாட்டின் 75 விகிதமான குடிமக்கள் வாழ்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் பொலீசாரால் தேடப்பட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சூறாவளி நியூசிலாந்தின் மீது தனது பிடியைத் தளர்த்திய பின்னர் அதனால் ஏற்பட்ட விளைவுகள் படிப்படியாக தெரியவருகின்றன. நாட்டில் மின்சாரச் சேவை, தொலைத்தொடர்புகள் மீண்டும் சரிசெய்யப்பட்டுப் பல முக்கிய சாலைகளும் பாவனைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. சுழன்றடித்த காற்றும், அள்ளி வீசப்பட்ட வெள்ளத்தாலும் பல வீடுகள், பாலங்கள், வீதிகள் உடைத்தெறியப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்