பிறந்திட வேண்டும் பெண்ணாகவே
இரும்பை விஞ்சும்
வலிமை கொண்டு
இருளை அகற்றும்
ஒளியாம் இவள்….
கரும்பை விஞ்சும்
இனிமை கொண்டு
கடினம் கரைக்கும்
கதிராம் இவள்…
குருதியை குழைத்து
பாலாய் தருவாள்
உறுதியை கொண்டு
செயலில் மிளிர்வாள்…
தந்திர மென்பதை
தேவைக்கேற்ப செய்வாள்
மந்திர கதைக்கு
மடங்கிட மாட்டாள்…
முயற்சிகளுக்கு அழகாய்
பயிற்சிகள் தருவாள்
அயர்ச்சிகள் அண்டவிடாது
அற்புதம் செய்வாள் …
எத்தனை எத்தனை
அவதாரங்கள்
சற்றும் அவளுகில்லை
ஆரவாரங்கள்…
இவ ளில்லா துறைகள்
எங்கும் இல்லை
நில்லாமல் சுழலும்
நிலவின் பிள்ளை…
மறுபிறப் பென்பது
இம் மண்ணிலிருந்தால்
மரமாய் புழுவாய் பறவையானாலும்
பிறந்திட வேண்டும் பெண்ணாகவே…!
உலக மகளிர் தின வாழ்த்துகள்..
வெண்பா.இரா.பாக்கியலட்சுமி
நிறுவுநர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்