பின்லாந்து தேர்தலும் மூன்றாம் உலகப் போரும்?
எழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா
வட துருவத்தை அண்டிய நாடான பின்லாந்தில் யனவரி 28இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் முன்னிலை வகித்த இருவருக்கும் இடையிலான தேர்தல் பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உலக அரசியல் அரங்கில் பெரிதும் அறியப்பட்டிராத பின்லாந்து கடந்த வருடத்தில் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது. 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட படையெடுப்பைக் காரணம் காட்டி, அமெரிக்கா தலைமயிலான நேட்டோ அமைப்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பின்லாந்து இணைந்து கொண்டது. ரஸ்யாவுடன் 1,340 கிலோ மீற்றர் நீளமான எல்லையைக் கொண்ட நாடான பின்லாந்து நேட்டோவுடன் இணைந்து கொண்டதை அடுத்து அந்த நாடு கேந்திர முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டது. அதன் பின்னான காலப்பகுதியில் நடைபெறும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அத்தோடு அரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவரே ஆயுதப் படைகளின் தளபதியாகவும் விளங்குவார் என்பதால் பதவியில் அமரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
5.6 மில்லியன் மக்கட் தெகையைக் கொண்ட பின்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 4.5 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். முதலாவது சுற்று வாக்களிப்பில் 71.53 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். 9 வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்த இந்தத் தேர்தலில் தேசியக் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனாள் தலைமை அமைச்சர் அலெக்சான்டர் ஸ்ரப் 27.21 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். தற்போதைய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த, மிகவும் அறியப்பட்ட ஐ.நா. சபை இராஜதந்திரியுமான பெக்கா ஹவிஸ்ரோ 25.80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுபவர் மார்ச் முதலாந் திகதி பின்லாந்தின் 13ஆவது அரசுத் தலைவராகப் பதவியேற்பார். பின்லாந்தில் அரசுத் தலைவரின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் ஆகும். அது மாத்திரமன்றி இந்தப் பதவி அமெரிக்க, ரஸ்ய, சீன அரசுத் தலைவர்களின் பதவிக்கு ஒப்பான நிறைவேற்று அதிகாரம் கொண்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
55 வயது நிரம்பிய ஸ்ரப் கடந்த 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வருடத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட அவர் தொடர்ந்துவந்த காலங்களில் பின்லாந்தில் பல தடவைகள் அமைச்சராகவும், 2014-15 காலப்பகுதியில் தலைமை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். 2017ஆம் ஆண்டில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உப தலைவராக நியமனம் பெற்றார். தற்போது ஐரோப்பியப் பல்கலைக் கழகக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
65 வயது நிரம்பிய மிகவும் அறியப்பட்ட இராஜதந்திரியான ஹவிஸ்ரோ அரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகின்றார். 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடப்பு அரசுத் தலைவர் சவுலி நினிஸ்ரோவை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டு தடவைகளிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். தற்போதைய தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கிய இவர் பசுமை அணியின் சார்பில் போட்டியிட்டிருந்தார். பல தடவை அமைச்சராகப் பணியாற்றியிருந்த இவர் கடந்த வருடம் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய போது பின்லாந்தை நேட்டோவில் இணைக்கும் ஆவணத்தில் இவரே கையொப்பம் இட்டிருந்தார். ஓரினச் சேர்க்கையாளராகத் தன்னை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டுள்ள இவர் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் அதிபரானால் அதுவும் ஒரு சாதனையாக வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது சுற்றில் ஸ்ரப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக எதிர்வு கூறல்கள் உள்ளன. எனினும், ஹவிஸ்ரோவுக்கும் அவருக்கும் இடையில் முதல் சுற்றில் பாரிய இடைவெளி இல்லாத நிலையில் முடிவுகள் மாறுவதற்கான வாய்ப்பும் தென்படுகின்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தமது வெற்றி தொடர்பில் இருவரும் நம்பிக்கை தரும் வகையிலான கருத்துக்களையே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருவரும் 53 விழுக்காடு வாக்குகளையே பெற்றுள்ள நிலையில் மீதி 47 விழுக்காடு வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் உள்ளனர். அதேவேளை, மீதி வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தமது வாக்காளர்களை யாருக்கு வாக்களிக்கக் கோர இருக்கிறார்கள் என்பதுவும் தீர்மானகரமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இருவரில் யார் வெற்றி பெற்றாலும் பின்லாந்தின் அரசியல் போக்கில் பாரிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது. வலதுசாரிச் சித்தாந்தைப் பின்பற்றும் இருவரும் வெளியுறவுக் கொள்கை உட்பட பல விடயங்களில் ஒத்த கருத்தையே கொண்டுள்ளனர். அது மாத்திரமன்றி எரியும் பிரச்சனையான உக்ரைன் போர் தொடர்பிலும் மேற்குலக சார்பு கருத்து நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ரஸ்யாவுக்கு எதிரான போக்கில், நேட்டோவில் அங்கத்துவம் பெற்றதில் இருந்து உள்நாட்டின் அரசியல் பொருளாதார விவகாரங்களில் கூட பாரிய கருத்து வேறுபாடு இல்லாதவர்களாகவே இருவரும் உள்ளனர்.
நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையிலேயே அடுத்த தலைவர் யார் என்பதை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தீர்மானிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அயலுறவுக் கொள்கையில் இருவருமே வல்லுநர்கள் எனக் கருதப்பட்டாலும் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த அனுபவத்தைக் கொண்ட ஹவிஸ்ரோ இதில் முன்னிலையில் உள்ளார்.
இருவரில் யார் தெரிவானாலும் அவருக்கு அடுத்துவரும் 6 வருடங்களில் தலையிடி காத்திருக்கிறது என்பது மாத்திரம் உண்மை. உக்ரைன் போரில் ரஸ்யா வெற்றி பெற்றுவிட்டால் அது ஏனைய அயல் நாடுகள் மீது படையெடுப்பை நடத்தக் கூடும் என்ற வதந்திகள் மேற்குலகில் வெளிவரத் தொடங்கி விட்டன. ஐரோப்பாவினுள் நுழையும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடனான தனது எல்லைகளை அண்மையில் பின்லாந்து மூடியிருந்த நிலையில் ரஸ்யாவின் தொடரப் போகும் எதிர்வினைகள் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்குமா? நேட்டோ ஆதரவு நாடு ஒன்றுடன் ரஸ்யா மோதும் நிலை உருவானால் அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா? அத்தகைய ஒரு போரை உலகம் தாங்குமா?
இவை தற்போது வரை விடை தெரியாத கேள்விகள். ஆனால் ஒவ்வொரு நிலையிலும் பின்லாந்தில் புதிதாகத் தெரிவாகும் அரசுத் தலைவர் சம்பந்தப்பட்டே ஆகவேண்டும் என்பது மாத்திரம் உண்மை.