குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட சமயத்தில் காற்றின் தரம் என்னவென்று அறிந்துகொள்ள உதவும் மலிவான கருவி தயாராகிறது.

சுவாசிக்கும் காற்றில் அளவுக்கதிகமாக நச்சுக்காற்றுக் கலந்து மாசுபட்டுவிட்டதால் இந்தியாவின் தலை நகரம் உட்பட்ட உலகப் பெரும் நகரங்கள் திண்டாடுவதை நாளாந்தம் அறிந்துகொள்கிறோம். நச்சுக்காற்றின் அளவை அறிந்துகொள்ளும் கருவிகளின் விலை தற்போது மிகவும் விலையானது என்பதால் பல வளரும் நாடுகளுக்கு அவைகளைத் தேவையான அளவில் பொருத்த முடிவதில்லை. பாவிக்கும் நாடுகளும் அவற்றை ஆங்காங்கே நகரின் பகுதிகளில் பொருத்தி அரச செலவில்தான் பாதுகாத்து வருகின்றன.

அந்தந்த வினாடியில் குறிப்பிட்ட இடத்தில் காற்று எவ்வளவு மாசுபட்டிருக்கிறது, அந்த நச்சுக்காற்றில் எந்தெந்த மாசுத்துகள்கள், எவ்வளவு கலந்திருக்கின்றன என்ற விபரங்களை அறிந்துகொள்ளக்கூடிய கருவியொன்றை பின்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தினர் கண்டுபிடித்திருக்கும் காற்று ஆராய்வுக் கருவி 5G தொலைநுட்பத்துடன் இணைக்கப்படக்கூடியது. அக்கருவியை ஒருவர் தனது வாகனத்தில் பொருத்திக்கொள்ளலாம். உதாரணமாக, அதைப் பாவிப்பதன் மூலம் அவர் தனது போக்குவரத்துப் பாதைகளை மாற்றிக்கொள்ளலாம். அது நகரங்களில் சுத்தமான காற்றை உண்டாக்க உதவும் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்