பெருமளவில் கொரோனாக் குளிகைகளை வாங்கும் டென்மார்க்கும், நாட்டையே முடக்கும் ஆஸ்திரியாவும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது கொவிட் 19. கடந்த வருடம் போல அவ்வியாதியால் இறப்பவர்கள் தொகையும், கடும் நோய்வாய்ப்படுபவர்கள் தொகையும் மிகக் குறைவாக இருந்தாலும் பரவலைத் தடுப்பதில் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வகையான நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள்.

தடுப்பு மருந்துகளைப் போடாதவர்களிடையேயே தொற்றும், நோய்வாய்ப்படலும், இறப்புக்களும் அதிகமாக இருக்கின்றது. எனவே தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி அதைச் செய்யாதவர்கள் வேண்டப்படுகிறார்கள். பலவீனர்களுக்கும், வயதானவர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி போடுதல் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 

தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பல இடங்களிலும், வெவ்வேறு விதமாகக் கட்டாயமாக்குவதில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. எல்லைகளிலும் அச்சான்றிதழ்கள் இல்லாவிட்டால் நோயில்லை என்று நிரூபிக்கும் விபரம் வேண்டப்படுகிறது.

சமீபத்தில் பைசர், மெரெக் நிறுவனங்கள் லேசாகக் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களைக் குணமாக்கும் குளிகைகளைச் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிப்பதற்காக ஆராய்வுகள் செய்யப்படுகின்றன. அதற்குள் டென்மார்க் அவற்றை 450 மில்லியன் டேனிஷ் குரோனர்களுக்குக் கொள்வனவு செய்ய முடிவு செய்திருக்கிறது.

டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் தமது நாட்டை மீண்டும் முழுவதுமாகப் பொதுமுடக்கம் செய்யலாகாது என்று முடிவெடுத்து மற்றைய வழிகளைக் கையாளும் அதேசமயத்தில் ஆஸ்திரியா முதலாவது ஐரோப்பிய நாடாக குடிமக்களனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டத்தை பெப்ரவரியில் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறது.

“எல்லாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்று நாம் ஊக்குவித்து, வேண்டிக்கொண்டோம். ஆனால், அதில் எங்களால் வெற்றிபெறமுடியவில்லை. எனவே இந்தக் கடுமையான முடிவை எடுக்கவேண்டியிருக்கிறது,” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் பிரதமர், அலெக்சாந்தர் சல்லன்பெர்க்.

அத்துடன் திங்களன்று முதல் ஆஸ்திரியர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் பொதுமுடக்கம் தொடங்குகிறது. அதன் விளைவுகளை ஆராய்ந்த பின்னர் மேலும் 10 நாட்கள் அது தொடரலாம். டிசம்பர் 13 ம் திகதி வரை பொதுமுடக்கம் தொடர வாய்ப்பிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அச்சமயத்தில் பாடசாலைகள் திறந்திருக்கும். நிறுவனங்களில் கட்டாயமாக வேலைக்குப் போகவேண்டியவர்கள் தவிர மற்றோர் வீட்டிலிருந்து வேலைசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்