சுவீடனையும், பின்லாந்தையும் ஆக்கிரமிக்கப்போவதாக புத்தின் மிரட்டுவதாக அமெரிக்க ஐ.நா தூதுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப்போரைக் கண்டிப்பது பற்றி வாதிக்க ஐ.நா-வின் பொதுச்சபை கூடியிருந்தபோது அச்சபைக்கான அமெரிக்கத் தூதுவர் லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் புத்தின் அடுத்த கட்டமாக சுவீடனையும், பின்லாந்தையும் ஆக்கிரமிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு எல்லோரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

“ரஷ்யா தனது அணு ஆயுதங்களைச் செலுத்துவதற்குத் தயாரான நிலையில் இருக்கிறது. அடுத்ததாக சுவீடனையும், பின்லாந்தையும் ஆக்கிரமிக்கவிருப்பதாக புத்தின் மிரட்டுகிறார்,” என்று அத்தூதர் குறிப்பிட்டார்.

“சுவீடனும், பின்லாந்தும் நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாகுவதற்கு அடியெடுத்து வைப்பார்களானால் அந்த நாடுகள் அரசியல், இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யாவிடமிருந்து எதிர் நோக்கவேண்டி வரும்,” என்று என்று புத்தின் கடந்த வாரம் எச்சரித்திருந்ததையே அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் வல்லரசுத் தனமான நகர்வே அப்படியான ஒரு மிரட்டல் இருப்பதாக உலகுக்குக் குறிப்பிடுவது என்று கருதுகிறார்கள் சுவீடன், பின்லாந்து அரசியல் ஆய்வாளர்கள். மேற்கு உலகுக்கும் கிழக்கில் ரஷ்யாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே சுவிடன், பின்லாந்து ஆகிய நாடுகள் விளையாட்டுக் கட்டைகளாகப் பாவிக்கப்படலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

பின்லாந்திலும், சுவீடனிலும் நாட்டோ அமைப்பில் சேர்வதற்கு மக்களிடையே தொடர்ந்தும் பெரும் வரவேற்பு இல்லாமலே இருந்து வருகிறது. சுவீடனின் அரசியல் கட்சிகளிலோ சமீப காலத்தில் நாட்டோ அங்கத்துவத்துக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனாலும், அவ்வமைப்பில் சேர முயல்வது ரஷ்யாவுக்குப் பெரும் ஆத்திரத்தை உண்டாக்குமென்பதை இந்த நாட்டவர்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்