ஆபிரிக்க நாடுகளில் அரசியல் ரீதியாக உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தோர் ஒரு சிலவே.

உலகின் பல நாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்ததைப் பல வழிகளிலும் கண்டித்திருக்கின்றன. பல நாடுகள் ரஷ்யாவுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்கக் கண்டத்தில் ரஷ்யாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்த நாடுகள் மிகக் குறைவானவையே. அதன் காரணம், சமீப வருடங்களில் ரஷ்யா ஆபிரிக்க நாடுகளின் மீதாகத் தனது சிறகுகளை விரித்திருப்பதே.

ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை, “சஞ்சலத்துடன் பார்க்கிறோம்,” என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது. கண்டிக்கவில்லை, கருத்துச் சொல்லவில்லை. அதுவே, ஆபிரிக்க நாடுகளிடயே ஒற்றையான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. 

முக்கிய ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்து வருகிறார். போர் நிலைமை ஏற்பட்டிருப்பதற்காக மனவருத்தம் தெரிவித்து இரண்டு பகுதியாரையும் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும்படி மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார். கொரோனாக்காலத்தின் பின்னர் உயிர்பெற்றுவரும் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் இடர்கள் ஏற்படலாமென்ற அச்சம் இருப்பதாகவும் ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் புத்தினின் நடவடிக்கைகளுக்கு உற்சாகமாக வரவேற்புக் கொடுத்திருக்கிரார்கள். மேற்கு ஆபிரிக்க நாடுகளின் இராணுவங்கள் அரசுகளைப் புரட்டியபின் ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் அந்த இராணுவ ஆட்சிகளுக்கு மிண்டு கொடுத்து வருகிறது. முக்கியமாக மாலியின் இராணுவத் தலைமை அங்கிருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராணுவத்தை வெளியேற்றியிருக்கிறது. 

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதி Faustin-Archange Touadéra பகிரங்கமாக உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தில் தனி நாடாக்கப்பட்ட இரண்டுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன், புத்தினின் நடவடிக்கைகள் சரியானதே என்கிறார். அங்கேயும் ரஷ்யாவின் வாக்னர் நிறுவனத்தின் படை ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையாக வாடகைக்கு இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்