சுவீடன், பின்லாந்து நாட்டோ விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்காவிட்டால் F16 விமானங்கள் கிடைக்காது.

“நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்வதற்காகச் சுவீடனும், பின்லாந்தும் செய்திருக்கும் விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாவிட்டால் F16 போர்விமானங்களைத் துருக்கி வாங்க அனுமதிக்கமுடியாது,” என்று அமெரிக்காவின் 27 செனட்டர்கள் ஒன்றிணைந்து ஜோ பைடனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் அவ்விமானங்களின் விற்பனைக்கான ஆதரவு கிடைக்காவிட்டால் துருக்கிக்கு அவர்கள் பல வருடங்களாகக் கெஞ்சிக்கேட்டுவரும் அந்த விமானங்கள் கிடைக்காது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் இதுவரை நாட்டோ அமைப்பில் சேர மறுத்துவந்த பின்லாந்து, சுவீடன் நாடுகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. அதற்கான விண்ணப்பத்தையும் அனுப்பியபின் நாட்டோ அமைப்பின் அங்கத்துவரான துருக்கி சுவீடன் மீதுள்ள சில அரசியல் சிக்கல்களால் பின்லாந்தை மட்டுமே அங்கத்துவராக்க ஏற்றுக்கொள்வேன் என்கிறது.

போர் ஏற்படுமானால் ஐரோப்பாவைப் பாதுகாக்க ரஷ்யாவுடன் நீர், நில எல்லைகளைக் கொண்டிருக்கும் சுவீடன், பின்லாந்து இரண்டு நாடுகளும் நாட்டோவில் சேர்ந்திருப்பது அவசியமாகும். எனவே, இரண்டுமே ஒன்றாக மட்டுமே நாட்டோ இணைவை விரும்புகின்றன. அதையே மற்றைய நாட்டோ அங்கத்துவர்களும் நாடுகிறார்கள். அவர்களெல்லோரும் அமெரிக்கா, துருக்கியின் மீது அரசியல், பொருளாதார அழுத்தம் கொடுத்து அதன் மூலம் சுவீடனின் நாட்டோ இணைவைத் துருக்கி ஏற்கும் நிலையை உண்டாக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *