ஒரு டசின் ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து 2030 இல் பிள்ளைகளிடையே எய்ட்ஸ் பரவல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றன.

தமது நாடுகளில் பிள்ளைகளிடையே 2030 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பனிரெண்டு ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. கொங்கோ, கென்யா, மொஸாம்பிக், அங்கோலா, கமரூன், ஐவரிகோஸ்ட், ஸிம்பாவ்வே, தென்னாபிரிக்கா, உகண்டா, தன்சானியா, நைஜீரியா, சாம்பியா ஆகியவையே அந்த நாடுகள். ஐ.நா-வின் UNAIDS அமைப்பால் பிரேரிக்கப்பட்ட அத்திட்டத்தை அந்த நாடுகள் முழுமையாக ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டிருக்கின்றன.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கபிரியேசுஸ் அவர்களிடையே உரையாற்றும்போது, “இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சகல கருவிகளையும் நாம் தயாராக வைத்திருக்கிறோம். உங்களது மனப்பூர்வமான ஆதரவும், செயற்பாடும் இருக்குமானால் வெற்றியைக் காணமுடியும்,” என்று குறிப்பிட்டார். தன்சானியாவின் டார் அல் சலாம் நகரில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

எய்ட்ஸ் பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கப்படும் மருத்துவ சேவைகளைப் பரவலாக்குதல், குழந்தைகளை ஆரம்பத்திலேயே அந்த நோய்க்காகப் பரிசீலனை செய்தல், ஆரோக்கிய சேவையிலிருக்கும் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகளை அகற்றுதல் ஆகியவை அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படும் நடவடிக்கைகளாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *