வயதுக்கு வராத பெண்களைத் திருமணம் செய்துகொண்ட 1,800 ஆண்களை அஸ்ஸாம் பொலீஸ் கைது.

இந்தியச் சட்டப்படி 18 வயதானவரே திருமண பந்தத்தில் ஈடுபடலாம். அப்படியிருந்தும் காதும் காதும் வைத்ததுபோன்ற தொடர்புகளால் சிறுவயதினர் விவாகங்கள் பல நடக்கின்றன. உலகிலேயே குழந்தைக் கல்யாணங்கள் அதிகமாக நடப்பது இந்தியாவிலேயேயாகும். வயதுக்கு வராதவர்கள் சுமார் 1.5 மில்லியன் பேர் வருடாவருடம் அங்கே நடப்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறது ஐ.நா அமைப்பு. அஸ்ஸாம் மாநிலத்தில் அப்படியான விவாக உறவு செய்துகொண்ட 1,800 ஆண்களைப் பொலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

குழந்தைகள் திருமணங்களை ஏற்றுக்கொள்வதில் 0 % ஆக இருக்கப்போவதாக அஸ்ஸாம் மாநில அரசு சமீபத்தில் சூழுரைத்திருந்தது. அதை நடைமுறைப்படுத்த மாநிலமெங்கும் ஒரேசமயத்தில் நடத்தப்பட்ட வேட்டையிலேயே 1,800 ஆண்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

கைதுசெய்யப்பட்டவர்களை உள்ளடக்கிய 4,004 வழக்குகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. திருமணத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுடைய திருமணத்தைத் திட்டமிட்டவர்கள், கல்யாணம் செய்துவைத்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 

அதிகமான குழந்தைகள் இறப்புக்கும், பெண்களின் ஆரோக்கியம் மோசமாவதற்கும் குழந்தைத்திருமணங்கள் காரணமாக இருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *