ஆக்ஞா சக்ரத்தில் அமர்ந்தருளும் மனோன்மணி
ஆகர்ண சக்ரா ராஜவித்யா என்றழைக்கப்படும் ஸ்ரீவித்யா உபாசனையின் (சக்தி வழிபாடு) முக்கிய தேவியே மனோன்மணி ஆவாள். ’ராஜனுக்கிரு கண்மணியாயுதித்த மலைவளர் காதலிப்பெண் உமையே’ என்றார் தாயுமானவர். கங்கா, உமா என ஈசனுக்கு இரு பத்தினிகள். கங்கையை சிரசில் தாங்கி கங்காதரர் ஆனார் அவர். அவரின் இன்னொரு பத்தினியே தேவி ராஜராஜேஸ்வரியான காமாட்சியாவாள். இதை தன் ஸௌந்தர்யலஹரி 97வது பாடலில் ‘பரப்ரஹ்ம மகிஷி’ என்கிறார் ஆதிசங்கரர்.
தேவியின் திருவடிகள் ஒளி பொருந்தியதால் சூரியனாகவும், அமிர்தமயமாய் உள்ளதால் சந்திரனாகவும், சிவப்பு நிறத்தால் செவ்வாயாகவும், தன்னை வந்து வணங்கி பக்தி செய்வோர்க்கு சௌம்யமாய் இருப்பதால் புதனாகவும், புத்திமானாதலால் குருவாகவும், கவித்தன்மை கொண்டதால் சுக்கிரனாகவும், மந்தகதி நடையால் சனியின் தன்மை கொண்டதாகவும், ஞானத்தை வழங்குவதால் ராகு-கேதுவாகவும் விளங்குகிறது.
தேவியின் திருவடிகளைப் பூஜிப்பவர்கள் நவகிரகங்களையும் பூஜிக்கும் பலனையும் பெறுகிறார்கள். இதே கருத்தை ஈசனைக் குறித்து திருஞானசம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகமும், அருணகிரியார் முருகனைக் குறித்துப் பாடிய ‘‘நாளென் செய்யும்…” எனும் கந்தர்அலங்காரப் பாடலும் வலியுறுத்துகின்றன. நெற்றிக் கண்ணால் காமனை அழித்தார் ஈசன். அதன்பின் தேவியின் கடைக்கண் பார்வையால் உயிர் பெற்ற காமனால் வசப்படுத்தப்பட்டார். எனவே, தேவிக்கு எந்தக் காரியமும் செய்வது அரிதன்று. அந்தப் பரமேஸ்வரனையே தனக்குட்படுத்திக் கொண்டவள் அவள்.
தேவியின் பாதங்களை கிளிக்கூடாக தன் ‘பாதாரவிந்த சதக ஸதா ஸ்வாதுங்காரம் எனும் ஸ்லோகத்தில் உருவகிக்கிறார் மூகர். பஞ்சேந்தியங்களாலும் இந்திரிய சுகங்களை அனுபவிக்கிறோம். அலைபோலப் பரப்பிய நொய்யரிசியைப் புசித்துப் புசித்து அலுத்துவிட்ட இந்த மனித மனமெனும் கிளிக்குஞ்சை, ‘அம்மா தேவி, காமாட்சி, உன் பாதமெனும் கிளிக்கூட்டில் அடைத்து வைப்பாயம்மா! அதை இக்கணமே செய்வாயம்மா’ என மூகர் கூறியதுபோல் தேவியை நினைந்து நினைந்து, கசிந்து கசிந்து, உருகி உருகி வழிபட்டால் அவள் வலிய வந்து நம்மை ஆட்கொள்வாள். இது சத்தியம். விசுத்தி சக்கரம் தூண்டப்படும்போது மனோமய கோசத்தில் கேள்வி ஞானம் ஏற்படுகிறது. பிராணமயத்தில் இன்னிசை கேட்கும்.
பஞ்ச பூதங்களில் ஆகாயமாக விளங்கும் சிதம்பரம் விசுத்தி க்ஷேத்திரமாகும். பொன்னம்பலத்தில் ஓமெனும் பிரணவ பீஜாட்சரத்தின் வடிவமாகவே நின்றாடும் நடராஜரை தரிசிக்க இரு கண்கள் போதாது. இத்தலம் பூலோக கைலாயம், புண்டரீகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
சௌனகமுனிவர் நந்திகேஸ்வரரிடம் சிவதாண்டவத்தைக் காண விரும்புவதாக கூற, நந்தியம்பெருமான் அவரிடம், ‘‘சிதம்பர க்ஷேத்திரத்திலுள்ள சிவகங்கையில் நீராடி, மார்கழி முதல் ஓராண்டு காலம், தினமும் 10,000 முறை பஞ்சாட்சர ஜபம் செய்து மூலநாதரையும், சபாபதியையும் வலம் வந்து, தான தர்மங்கள் செய்தால் ஓராண்டிற்குள் ஈசனின் தாண்டவத்தைக் காணலாம்’ என்று கூறினார்.
அதன்படி அவர் நடந்து சென்று ஈசனின் தாண்டவத்தை தரிசித்த திருத்தலம் இது. இங்கு ஐம்பொன்னால் ஆன நடராஜ மூர்த்தியே மூலவர். அவரே உற்சவர். கோபுரம், விமானம், பிராகாரம், கொடிமர மண்டபம் ஆகியவற்றுடன் தனிக்கோயில் கொண்டருள்கிறாள், அன்னை சிவகாமசுந்தரி. நடராஜப்பெருமானுடன் சிவகாமசுந்தரியையும் சேர்த்து பூஜிப்பதே வழக்கம். திருமாலும் கோவிந்தராஜப் பெருமாள் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள பெருமை மிக்க தலம் இது. இத்தல வடக்கு கோபுரத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தில்லைக்காளி வரப்ரசாதியாக திருவருட்பாலிக்கிறாள். இந்த தில்லைக்காளி திருத்தலத்திலுள்ள சிவப்ரியை தீர்த்தம் சித்தப்பிரமையை நீக்கும் வல்லமை கொண்டது.
அதுமட்டுமல்லாது கடம்பவன தட்சிணாமூர்த்தி எனும் பெயரில் அபூர்வமான பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
ஹாகினீ தேவி (ஆக்ஞை)புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள்புரிபவள்.
இதை லலிதா ஸஹஸ்ரநாமம்,ஆக்ஞா சக்ராப்ஜ நிலயா சுக்லவர்ணா ஷடானனாமஜ்ஜா ஸம்ஸ்த்தா ஹம்ஸவதீ முக்யசக்தி ஸமன்விதாஹரித்ரான்னைக ரஸிகா ஹாகினீ ரூபதாரிணி- எனப் போற்றுகிறது.
‘ஆதாரமாய் மூலப்பிரக்ருதி பிரபஞ்சத்தை அடக்கியே உள்ளே ஆனந்தம் ஆக்ஞையிலிருந்து அகண்டமீரேழும் காத்து அளிக்கும் எங்கள் நாதனைக் கண்டு தொழுதேன்’ எனும் பாடலும் இக்கருத்தை கூறுகிறது. குண்டலினி சக்தியான மூலாதாரத்திலிருந்து தொடங்கும் வரிசையில் புருவ மத்தியிலுள்ள சக்திக்கே ஆக்ஞா சக்கரம் என்று பெயர். இது இதற்குக் கீழேயுள்ள சக்கரமான விசுத்தியிலிருந்து ஒன்பது அங்குலம் மேலேயுள்ளது. நீலநிறம் கொண்டு விளங்குவது. இச்சக்கரத்தில்தான் ஒட்யாணம் எனும் மகாபீடம் உள்ளது என யோகசிகை எனும் நூல் கூறுகிறது. இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தனும் ஹாகினீ போன்ற தேவியோடு திருவருள்பாலிக்கிறாள்.
இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல துரீயலிங்கம் என உபாசகர்கள் அழைப்பர். இரண்டு தளங்கள் ஹ, க்ஷ எனும் அக்ஷரங்களைக் குறிக்கின்றன. அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர். இத்தேவியின் பீஜாக்ஷரம், ஓம். தெய்வம் மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
மனோன்மணி என்றால் சதாசிவனுடைய மனதிற்கு சந்தோஷமளிப்பவள் என்று பொருள். உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். உன்மனீ பாவம் என்பது சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம் செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்.
இந்த ஆக்ஞைக்கு சமமான லோகம் ‘தமோலோகம்’.
இந்த ஆக்ஞா சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன. இதன் முதல் ஆதார சக்ரமான விசுத்தியினுடைய 72 கலைகளையும் இவற்றுடன் சேர்க்க 136 கலைகள் கிடைக்கும். எனவே மூலாதாரம் முதல் ஆக்ஞைவரை அமைந்த அக்னி, சூரியன், சோமன் என்ற மூவருடைய கலைகளும் சேர்ந்து 360 கலைகளும் பிரகாசிக்கும் சக்ரம் ஆக்ஞா ஆகும். இவற்றிற்கு மேலே சந்திரனுடைய இருப்பிடம் உள்ளது. இதை ப்ரம்ஹக்ரந்தி என்பர்.
இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர். இரு புருவங்களுக்கிடையே உள்ள ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். தேவியின் ஆக்ஞை பிரகாசிக்கும் இடமாதலால் இந்த சக்கரம் ஆக்ஞா சக்கரம் எனப் போற்றப்படுகிறது. இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது. ஸௌந்தர்ய லஹரியின் தவாக்ஞா எனும் 36வது ஸ்லோகத்தில் மனம் என்ற தத்துவத்திற்கு அதிஷ்டான தேவதையான பரசம்புவின் தியான மகிமை கூறப்பட்டுள்ளது.
அக்னி கண்டம், சூரிய கண்டம், சந்திர கண்டம் போன்றவற்றின் 360 கலைகளும் இந்த ஆக்ஞா சக்கரத்தைத் தாண்டி செல்லாது. சிவ-சக்தி ஐக்கிய வடிவத்தை இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்குக் கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும் என்கிறார் ஆதிசங்கரர். இச்சக்கரத்தில் தேவதேவியர் பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.
ஸ்ரீவித்யா முறைப்படியும், சத்குருவின் துணையோடும், பூர்வ ஜென்ம புண்ணிய வசத்தாலும், பல ஜென்ம பூஜாபலனாலும், அயர்வற்ற முயற்சியாலும் மாத்திரமே தேவியின் திருவடிகளை அடைய வேண்டும். தேவியே கதி என சரணடைந்த பக்தர்களை அவள் கட்டாயம் கைதூக்கி தன் சரண கமலங்களில் சேர்த்துக் கொள்வாள். ஜீவாத்மா -பரமாத்மா சந்திப்பு ஏற்பட்டு ஜீவனிடம் ஈஸ்வர ஆக்ஞை பிரகாசிக்கும் இடம் இந்த சக்ரம். நம் பஞ்சேந்திரியங்களில் மிகவும் நுட்பமானது, கண்கள்.
மற்ற விஷயங்கள் தம்மை நாடி வருபவற்றையே பற்றும். கண்கள் மட்டும்தான் தேடிச்சென்று பற்றும். இக்கண்கள் காணும் ஒளியை லட்சியமாகக் கொள்ள வேண்டும். மனம் சிறிது சிறிதாக கீழ் நோக்குதலை விட்டு சிரஸை அடையும்போது ப்ருத்வி, அப்பு, தேயு, வாயு இவை நான்கும் மலர்ச்சியடையும். சுழுமுனை நாடி ஊர்த்துவ முகமானபோது ஆண்-பெண் பேத உணர்வு அகன்றுவிடும். ஒரு காலை ஊன்றி நிற்கும்போது உடல் பாரம் முழுதும் அக்காலிலே விழுவது போல இடப்புறப் பார்வையை வலப்புறமாக மாற்றினால் வலது புறமான பிங்கலா நாடியில் கனம் தங்கும். இப்பயிற்சியால் லலாடஸ்தானப் பூட்டு திறக்கும். அந்த நிலையைத் தாண்ட, ஆகாயவெளி கிட்டும். அதுவே சிதம்பர ரகசியமாகப் போற்றப்படுகிறது.
சிவ ஒளியும், ஜீவ ஒளியும் சேர்வதில் ஒரு இன்பம் உண்டு. இந்திரியங்களை ஜெயித்து நிற்கும் ஒரு சுகநிலை அது. ஸஹஸ்ராரம் திறக்கும் முதல் நிலை, புருவமத்தியே. குருவும் சீடனும் கூடுமிடம் இதுவே. ஒளிவிடும் முதல் நிலையும் அதுவே. நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளிஉற்றுற்றுப் பார்க்க ஓளிமிகு மந்திரம்பற்றுக்குப் பற்றாய் பரமனிருதிடஞ்சிற்றம்பலம் என்று சேர்ந்து கொண்டேனே – என்கிறார் திருமூலர். காளிதாஸன் தன் லகுஸ்தவம் எனும் துதியில் நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும் என்று தேவியின் திருக்கண் நோக்கு யார் மீது படுகிறதோ அவர்கள் ஞானமே இல்லாமல் ஜடத்தன்மை யுடையவர்களாய், பிறவியிலே தரித்திரர்களாய், காண்பதற்கு அருவருப்பு உடையவராய் இருந்தாலும் தேவியின் கடாக்ஷ மகிமையால் அவர்கள் வாக்குகளிலே தேனின் இனிமையும், இந்திரனை விட செல்வ வளங்களையும், உடலிலே மன்மதனுக்குரிய அழகின் சிறப்பையும் பெறுவார்கள் என மூகர் தன் ஸ்துதி சதகத்தில் ‘ஜடா: ப்ரக்ருதி’ எனும் 82ம் ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆக்ஞை தூண்டப்படும்போது மனோரம்யமான காட்சிகள் நம் கனவில் தென்படும்.
பிராணமயத்தில் விழித்திருக்கும்போதே அபூர்வ காட்சிகள் தோன்றும். இறப்பவர்களுக்கு முக்தி தரும் காசி க்ஷேத்திரம், ஆக்ஞை தலமாகும்.
காசியில் அன்னபூரணியின் ஆட்சியே நிலவுகிறது. எல்லோருக்கும் உணவளித்துக் காப்பவளே இத்தாய். அதற்கேற்றாற்போல் தேவி எந்நேரமும் உணவுப் பாத்திரத்துடனும், உணவை அள்ளி அள்ளி வழங்க கரண்டியையும் ஏந்தி அருள்கிறாள். ஈசனின் சூலத்திலிருந்து தோன்றியதாகக் காசி கருதப்படுகிறது. வருணா, அஸி எனும் இரு நதிகள் கங்கை நதியில் கலப்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. இங்கு கங்கை உத்தரவாகினியாக இருப்பதால் மிகவும் சிறப்பு பெறுகிறாள். இந்த க்ஷேத்திரத்தில் வசிப்பது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இத்தலம் பூலோக கைலாயமாகப் போற்றப்படுகிறது.
ஒவ்வொரு படித்துறையிலும் நீராடினால் ஒவ்வொரு பலனைப் பெறலாம். இறுதிப் படித்துறையான வாரணைக் கட்டத்தில் கட்டாயம் நீராட வேண்டும். துர்க்காகுண்ட் எனுமிடத்தில் விஸ்வநாதரின் சகோதரியாகக் கருதப்படும் கௌடியம்மனை தரிசித்து, சோழிகள் வாங்கி ‘காசிபலன் எனக்கு கௌடி(சோழி பலன்) உனக்கு’ என்று சொல்லி சோழிகளை உருட்டிப்போட்ட பிறகுதான் காசியாத்திறை பூர்த்தி ஆகிறது
ஓம் மனொண்மணி தாயே போற்றி
எழுதுவது :
கோபி சிவம் குருக்கள்
ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயில்
Croydon
லண்டன்