மௌனம்..!

மௌனத்தைபோல் ஒருமாமருந்தில்லை


ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!

அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?

அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……

ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!

மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்…

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,

“உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!”

அப்படி செய்யாமல் போனால், “ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!””.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *