ஈரான்-இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம்| உலகுக்கு சொல்லும் செய்தி என்ன ?
ஈரானின் சபகர் (Chabahar) துறைமுக அபிவிருத்தி , அதனை 10 வருடங்கள் நிர்வகிப்பது தொடர்பாக நேற்று (13/5/24) ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம். இதனூடாக ஆப்கனிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைப்பினை ஏற்படுத்துவதே இந்தியாவின் மூலோபாயமாகும்.
அண்மையில் இதற்குச் சமாந்தரமாக, இன்னொரு முன்னெடுப்பும் நிகழ்ந்தது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் சவுதியும் ஈரானும் அமீரகமும் இணைந்த வேளையில் அது மேலும் தீவிரமடைந்தது.
அந்நிகழ்வு கடந்த ஜீ20 மாநாட்டில் இந்திய பிரதமரின் வெற்றிப்பிரகடனத்தோடு வெளிப்படடது. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக மோடி பெருமைப்பட்டார்.
அதாவது இந்தியா-சவுதி அரேபியா-இஸ்ரேல்- கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இணைக்கும் ‘பொருளாதாரப் பாதை’ ஒன்றினை அமைக்கும் மேற்கின் திட்டத்திற்கு இங்குதான் அடித்தளமிடப்பட்டது.
இதில் இஸ்ரேல்-சவுதி உறவு முக்கியமானது. ஆய்வுத் தளங்களில் பென்கூரியன் கால்வாய் குறித்தும் பேசப்பட்டது.
ஆனாலும் ஹமாசின் ஒருங்கிணைக்கப்பட்ட, இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலானது, இந்தியாவின் புதிய பொருளாதாரப் பாதைக்கு வேட்டு வைத்துவிட்டது. அதன் எதிர்விளைவாக சவுதி அரேபியா இதிலிருந்து பின்வாங்கியது.
இந்தியாவின் இருவழிப்பாதையில் ஒன்றான மேற்குலக சார்புப் பாதையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளதால், முதல் பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பித்துள்ளது இந்திய அரசு.
அதுதான் ஈரான்-இந்திய ஒப்பந்தம்.
இரண்டு Economic Corridor களையும் இந்தியா விரும்புகிறது.
அதுதான் இந்தியாவின் நீண்ட இலக்கு.
ஆகையால் மேற்கையும் ரஷ்யாவையும் ஒரு சேரக் கையாளும் இந்திய இராஜதந்திரம் இனிப் பல சவால்களை எதிர்கொள்ளும்.
புதிய ஈரான்- இந்திய துறைமுக ஒப்பந்தத்தால் சீற்றமடைந்துள்ள அமெரிக்கா, இந்தியா மீதான பொருளாதார தடைகள் குறித்து வழமை போல் பேச ஆரம்பித்துள்ளது.
எழுதுவது :இதயச்சந்திரன்
(14 மே 2024)