ஈரானியப் பொலீசார் இரும்புக்கைகளுக்கடங்காமல் தொடர்கிறது பெண்களின் ஹிஜாப்-எரிப்பு போராட்டம்.

இளம் பெண்ணொருத்தி தனது தலையில் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டம் ஈரானில் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. ஞாயிறன்றும் நாட்டின் பல நகரங்களில் பாடசாலைப் பெண்கள் முன்னணியில் நிற்க ஈரானியர்கள் தமது ஆன்மீகத் தலைவரை எதிர்த்துக் கோஷமிடுகிறார்கள். அரசும், ஆன்மீகத் தலைமையும் மக்களை அடக்கும்படி பொலீசாருக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பதால் எதிர்ப்புக்காரர்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நோர்வேயில் செயற்படும் ஈரானிய எதிர்க்கட்சியினரின் அமைப்புகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியிருக்கும் மாகாணங்களான சிஸ்தான், பலூச்சிஸ்தான் ஆகியவற்றிலேயே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். 19 குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானின் பாதுகாப்புப்படையினர் தாம் போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிச்சூடுகள் நடத்தவில்லை என்கிறார்கள். போராடுகிறவர்களுக்குள்ளேயே மறைந்திருக்கும் அமெரிக்க, இஸ்ராயேலியக் கைக்கூலிகளே அத்தாக்குதல்களை நடத்தியதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள்.

வெள்ளியன்று ஈரானின் பிரேதப்பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் காவலில் இறந்துபோன மாஷா அமீனியின் இறப்புக்குக் காரணம் அப்பெண்ணுக்கு இருந்த வியாதியே என்று அறிக்கை விட்டிருந்தனர். அதை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்தும், “சர்வாதியே ஒழிந்து போ,” “ பெண்கள் என்றால் உயிர்” என்ற கோஷங்களுடன் பெண்கள் நகரங்களில் கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். அங்கே எடுக்கப்பட்ட படங்கள் பலவும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி மக்களின் குரலையும், அரச படைகளின் தாக்குதல்களையும் பறைசாற்றி வருகின்றன.

சனியன்று மாலையில் ஈரானிய அரசின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமெய்னி. அந்த நிகழ்ச்சிக்குள் தொலைத்தொடர்பு மூலம் புகுந்த எதிர்ப்பாளர்கள் கமெய்னியைச் சுற்றி நெருப்பு பற்றியெரிவதாகக் காட்டினார்கள். அத்துடன் மாஷா அமீனியும், கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மேலும் மூன்று பெண்களின் படங்களும் இணைந்திருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *