ஈரான் உதைபந்தாட்டக் குழுவின் கோல் காப்பாளர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

2016 ம் ஆண்டில் ஈரானிய கோல் காப்பாளர் அலிரெஸா பெய்ரான்வாண்ட் [Alireza Beiranvand] நிகழ்த்திய சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பந்தை எடுத்து மைதானத்தில் வீசுவதில் சர்வதேச ரீதியில் பெயர்பெற்ற அலிரெஸா அதே காரணத்துக்காகவே சாதனைப்பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

2018 சர்வதேசக் உதைபந்தாட்டக் கோப்பைக்காக போட்டியிடுவதற்கான மோதல்களில் 2016 ஒக்டோபரில் தென் கொரியாவுடன் மோதி ஈரான் 1 – 0 என்ற வெற்றியைப் பெற்றது. அந்த மோதலின் போது அலிரெஸா பந்தைத் தனது பகுதியிலிருந்து எடுத்து எதிர்த்தரப்பை நோக்கி வீசினார். அப்பந்து 61.26 மீற்றர் தூரத்துக்கு வீசப்பட்டது. 

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் ஒருவர் அவ்வளவு தூரம் பந்தை இதுவரை வீசியதில்லை. அந்தச் சாதனைக்காகவே அவரது பெயர் கின்னஸ் சாதனையாகக் குறிக்கப்பட்டு அவருக்கான சான்றிதழ் நவம்பர் 25 ம் திகதியன்று வழங்கப்பட்டது. 2022 இல் நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான போட்டியொன்றில் பங்குபற்றுவதற்காக சிரியாவுக்கெதிராக விளையாடியபோது அலிரெஸா பந்தை எறிந்த தூரம் 73,15 மீற்றராகும்.

தற்போது போர்த்துக்காலின் பூவாவிஸ்டா குழுவுக்காக விளையாடும் அலிரெஸா 29 வயதானவர். மிகவும் ஏழையான அலிரெஸா தனது உதைபந்தாட்டக் கனவை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு ஓடி வீதியில் வாழ்ந்தவராகும். கூலித்தொழில், வீதி கூட்டுதல், உடைதயாரிக்கும் தொழில் போன்றவைகளைச் செய்துகொண்டு வாழ்ந்த அவர் 2011 இல் தேசிய அளவில் உதைபந்தாட்ட வீரராகத் தனது கனவை எட்டினார்.

சாள்ஸ் ஜெ. போமன்